பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராகக் களமிறங்கி ஒரு கோலை அடித்த ஆன்டே புடிமிர் (Ante Budimir), குரோஷியாவின் 2026 ஃபிஃபா உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்று வாய்ப்பை வலுப்படுத்த உதவினார்.
கானாவுடனான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, வெற்றி கட்டாயம் என்பதை உணர்ந்திருந்த குரோஷியா, அதைச் சிறப்பாகச் சாதித்து ‘ குழு L’ பிரிவில் மூன்று புள்ளிகளைப் பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
டொராண்டோ ஸ்டேடியத்தில் செவ்வாய் (23) இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பனாமா அணியே சிறப்பாக விளையாடியது.
ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில், ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸின் சக்திவாய்ந்த ஹெட்டரை குரோஷியா கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிக் மிகச் சிறப்பாகத் தடுத்து குறுக்குக் கம்பத்தில் மோதச் செய்தபோது, பனாமா கோல் அடிக்கும் வாய்ப்பை மிக நெருக்கமாகத் தவறவிட்டது.
இருப்பினும், இடைவேளைக்குப் பிறகு குரோஷியா ஆட்டத்தில் வலுவான நிலையை எட்டியது; வலதுபுறத்திலிருந்து ஜோசிப் ஸ்டானிசிக் மிகச்சிறப்பாகக் குறுக்காக அனுப்பிய பந்தை, மாற்று வீரராகக் களமிறங்கிய ஆன்டே புடிமிர் கோல் கம்பத்தின் பின்பகுதியில் வைத்து கோலாக மாற்றியதன் மூலம் 54-வது நிமிடத்தில் அந்த அணி முன்னிலை பெற்றது.
இந்த கோல் மாத்திரமே ஒட்டுமொத்த போட்டியில் அடிக்கப்பட்ட கோலாக மாறியது.
இப் போட்டியில், 34 வயது 336 நாட்கள் வயதான புடிமிர், உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த குரோஷியாவின் மிக மூத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
2014-இல் கேமரூனுக்கு எதிராக ஓலிக் (34 வயது 277 நாட்கள்) படைத்திருந்த முந்தைய சாதனையை இவர் முறியடித்தார்.
அதேவேளையில், டொராண்டோவில் மற்றொரு மூத்த குரோஷிய வீரரான மோட்ரிச் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார்.
குரோஷிய அணிக்காக மோட்ரிச் தனது 200-வது சர்வதேசப் போட்டியில் விளையாடினார்; அதேவேளையில், 2006-ல் உலகக் கிண்ணத்தில் அறிமுகமானதிலிருந்து, அவர் விளையாடியுள்ள 21 போட்டிகளை விட அதிக போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23) மற்றும் லியோனல் மெஸ்ஸி (27) ஆகியோர் மட்டுமே விளையாடியுள்ளனர்.
குரோஷியா இந்த வெற்றியானது, இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருந்த நிலையில், பனாமா அணியை போட்டியிலிருந்து வெளியேறுவதையும் உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.















