பிரிட்டனில் தற்போது பதிவாகியுள்ள கடுமையான வெப்ப அலை, காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. காலநிலை விஞ்ஞானிகள், இப்போது அனுபவிக்கப்படும் அதிக வெப்பநிலைகள் அடுத்த சில தசாப்தங்களில் கோடைக்காலத்தின் வழக்கமான நிலையாக மாறக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
ஆய்வின் அடிப்படையில் உலக வெப்பமயமாதலால் எதிர்காலத்தில் பிரிட்டனின் பல பகுதிகளில் வெப்பநிலை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பது கணிக்கப்பட்டுள்ளது.
மெட் ஆபிஸ் வெளியிட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி இங்கிலாந்தின் தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஏற்கனவே நாட்டின் வெப்பமான பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில்தான் எதிர்காலத்தில் வெப்பநிலை உயர்வு மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடைக்காலங்களில் வழக்கமாக பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணிப்புகள் பல்வேறு உலக வெப்பமயமாதல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அவை தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலமான 1850 முதல் 1900 வரையிலான சராசரி உலக வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டுஇ அதைவிட எத்தனை டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு ஏற்படும் என்பதை அளவுகோலாகக் கொண்டுள்ளன.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் வெற்றியடையாவிட்டால், கடுமையான வெப்ப அலைகள் எதிர்காலத்தில் அடிக்கடி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவை சாதாரண கோடைக்கால வானிலையாகவே மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மனித ஆரோக்கியம், நீர் வளங்கள், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மீது பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

















