வெனிசுலா தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகியும், கட்டிடங்கள் சேதமடைந்தும் உள்ளன.
அதேநேரம், நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்; மேலும் பலர் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை கராகஸுக்கு மேற்கே சுமார் 160 கி.மீ (100 மைல்) தொலைவில் 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 7.5 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 1900-ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கமாகும்.
பல ஆண்டுகால பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்கனவே பலவீனமடைந்திருந்த ஒரு நாட்டை இந்தப் பேரழிவு தாக்கியது.
இதனால், அந்நாட்டின் பெரும்பாலான உள்கட்டமைப்புகள் பலவீனமடைந்ததோடு, பின் அதிர்வுகள் தலைநகரையும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளையும் உலுக்கியதால் மீட்புப் பணிகளும் மேலும் சிக்கலாகின.
மருத்துவ நிலையங்களுக்கு உயிரிழந்த சுமார் 235 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக சுகாதார அமைச்சர் கார்லோஸ் அல்வராடோ வியாழக்கிழமை (25) இரவு தெரிவித்தார்.
எனினும், உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.
வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸின் சகோதரருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ், முன்னதாக அன்று வெளியிட்ட தகவலில், 200 பேர் சிக்கிக்கொண்டதாகவும், 250 கட்டிடங்கள் சேதமடைந்தோ அல்லது அழிந்தோ உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
குறைந்தது எட்டு மருத்துவமனைகள், வெனிசுலா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் மற்றும் பிரெஞ்சுத் தூதரகம் ஆகியவை கடுமையாகச் சேதமடைந்த கட்டிடங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லா குவைரா (La Guaira) மாநிலத்தில் மாத்திரம் சுமார் 70,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்தார்.
இதேவேளை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் முன்கணிப்பு மாதிரியானது, இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயரக்கூடும் என்றும், அது 10,000-ஐத் தாண்டுவதற்கான கணிசமான நிகழ்தகவு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியது.
காணாமல் போனவர்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவர்களால் பகிரப்பட்டதுமான ஒரு இணையதளம், வியாழன் இரவு 7 மணிக்கு (2300 GMT) சற்றுப் பின்னர் 46,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகப் பட்டியலிட்டது.
அரசியல் அடக்குமுறை, பொருளாதாரச் சரிவு மற்றும் இராஜதந்திர அழுத்தம் ஆகியவற்றின் சுழலுக்கு மத்தியில் பல தசாப்தங்களாக சர்வதேசத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி வரும் வெனிசுலாவை எதிர்த்த சில நாடுகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தன.
சர்வதேச மீட்புக் குழுக்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரோட்ரிக்ஸ் கூறினார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
நிலநடுக்க நிவாரணம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் அளித்து, தடைகளைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை வொஷிங்டன் எடுத்தது.
இல்லையெனில் இந்தப் பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டிருக்கும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, வொஷிங்டன் மீட்புக் குழுக்களை அனுப்பும் என்றும், பென்டகன் கராகஸின் சேதமடைந்த விமான நிலையத்திற்கு தளவாட உதவிகளையும் ஆதரவையும் வழங்கும் என்றும் கூறினார்.
ஐ.நா.வின் உதவித் தலைவர் டாம் பிளெட்சர், அந்த அமைப்பு சர்வதேச மீட்புக் குழுக்களை ஒருங்கிணைத்து வருவதாகவும், நிலநடுக்கத்திற்கு முன்பு 8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்ட ஒரு நாட்டில் “ஒரு மாபெரும் கூட்டு முயற்சி” தேவைப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே, தகவல் தொடர்பு வசதியை ஒரு பிரதான விடயமாகக் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் வெனிசுலா மனித உரிமைகள் குழு, சில சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 25 வரை இலவச சேவையை வழங்குவதாகவும், தகவல் தொடர்பை மீட்டெடுக்க உதவும் வகையில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை (டெர்மினல்களை) நிறுவப் பணியாற்றி வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) தெரிவித்தது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான எண்ணெய் துறையில் செயல்படும் வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், எண்ணெய் தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலும் சேதமின்றி இருப்பதாகவும் தெரிவித்தன.















