பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனம் கண்டு உதவு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் துஷ்பிரயோக விடயங்கள் நடந்த பின்பு பேசுவதை விட சம்பவம் நடக்க முன்னர் கண்காணிப்புகளை மேற்கொள்வது அவசியமானதாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு சிறுவர் பெண்களுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும். பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்குஇ நாம் வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியமாகும்.
அந்த வகையில் சமூகத்தில் பாதிக்கப்படும் மற்றும் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர்இ யுவதிகளுக்கான வாழ்வாதார தேவைப்படுகள் வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் திட்டங்களில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பிரதேச செயலகங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனித்தனி கோவைகளை பேண வேண்டும். அதனூடாகவே அவர்களது தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதன் ஊடாக எதிர்காலங்களில் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியும்
பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனங்காணும் பட்சத்தில் அவர்களுக்கு உதவு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏதுநிலை காணப்படுகிறது அச் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோக விடயங்களின் நீதிமன்ற நடவடிக்கைகள், குடும்ப பாதுகாப்பு, அவர்களின் வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக வினைத்திறனாக செயலாற்ற வேண்டும்.
துஷ்பிரயோக விடயங்கள் நடந்த பின்பு பேசுவதை விட சம்பவம் நடக்க முன்னர் கண்காணிப்புகளை மேற்கொள்வது அவசியமானதாகும்.
மகளிர் செயற்பாட்டு சங்கங்களின் அங்கத்தவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ‘பெண்கள் சந்தை’ வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஏது நிலைகள் தொடர்பில் உத்தியோகஸ்தர்கள் ஆராய வேண்டும்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள கொடுப்பனவு திருத்தம் மற்றும் அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது.
அதனால் முழுமைப்படுத்தப்பட்ட தகவல்கள் புள்ளி விபரங்கள் கொள்கை ரீதியாக தீர்மானங்களை எட்டுவதற்கு ஏதுவாக உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.













