வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
பெரஹெர நடைபெறும் திகதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக, இன்று (08) பிற்பகல் தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய ஆகஸ்ட்13 முதல் 17 வரையில் நாத, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு மகா தேவாலயங்களில் உட்புற பெரஹெர நிகழ்வுகள் நடைபெறும் என குறிப்பிட்டார்.
ஒகஸ்ட் 18 முதல் 22 வரையில் முதலாவது ‘கும்பல்’ பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
ஒகஸ்ட் 23 ஆம் திகதி முதலாவது ‘ரந்தோலி’ பெரஹெர ஆரம்பமாகவுள்ளது.
ஆகஸ்ட் 27 ஆம் திகதி இறுதி மகா ‘ரந்தோலி’ பெரஹெர நடைபெறும்.
ஆகஸ்ட் 28 ஆம் திகதி நீர் வெட்டுதல் மற்றும் பகல் பெரஹெர இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து, அதே நாள் பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, பெரஹெர நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் ‘பெரஹெர விஞ்ஞாபனம்’ தியவடன நிலமேயினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஸ்ரீ ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின் பிரதி செயலாளர் மஹவெல ரத்தனபால தேரர், நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












