தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்குடனான (Stephen Fleming ) உறவை பரஸ்பர உடன்பாட்டுடன் முடித்துக்கொள்வதாக ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திங்களன்று (13) அறிவித்தது.
இது தொடர்பாக CSK வெளியிட்ட அறிக்கையில்,
சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்டீபன் ஃபிளெமிங் ஆகியோர் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகாலக் கூட்டணிகளில் ஒன்று முடிவுக்கு வருகிறது – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளெமிங் மற்றும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினரிடையே நடைபெற்ற வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.


2008 இல் நடைபெற்ற இத்தொடரின் முதல் சீசனில், எம்.எஸ். தோனியின் தலைமையிலான CSK அணியில் ஒரு வீரராக ஃப்ளெமிங் முதலில் இணைந்தார்.
தனது முதல் தொடரிலேயே CSK அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான அவர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இது, இப்போட்டித் தொடரிலேயே மிகச் சிறந்த பயிற்சியாளர் பணிக்காலங்களில் ஒன்றாக அமைந்த ஒரு நீண்டகாலத் தொடர்பின் தொடக்கமாக அமைந்தது.
5 ஐ.பி.எல். பட்டங்கள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றுள்ள ஃப்ளெமிங், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்த பயிற்சியாளராகத் திகழ்கிறார்.
பிளெமிங்கின் தலைமையின் கீழ், CSK அணி 11 தொடர்களில் நாக்-அவுட் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
2023-ல் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர், அடுத்தடுத்த இரண்டு தொடர்களில், CSK அணி தனது மிக மோசமான செயல்பாடுகளைப் பதிவு செய்தது.
2025-ஆம் ஆண்டில், சென்னை அணி வரலாற்றிலேயே முதல் முறையாகப் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
முன்னதாக, தொடர்ந்து மூன்றாவது சீசனாகப் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிய அந்த அணி, புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















