சீனாவில் 19 வயதுடைய ‘லி’ என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் (சீன யுவான் மதிப்பில் அதற்கு இணையான தொகை) மதிப்பிலான தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் தனது உயிர் நண்பருக்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த 19 வயதான ‘லி’ என்ற அந்த இளைஞனுக்குப் பூர்வீகமாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், வங்கிச் சேமிப்புகளும் உள்ளன.
எனினும், குடும்பச் சூழ்நிலை மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், அவரது உயிர் நண்பரே அவருக்குப் பக்கபலமாக இருந்துள்ளார்.
தனது பெற்றோர் விவாகரத்து செய்து பின்னர் தனித்தனியாக மறுமணம் செய்துகொண்ட நிலையில், குடும்பச் சூழ்நிலையே இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவருக்கு தனது சொத்துகள் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தையே உயிலில் தெளிவாகப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி தனக்கு ஆதரவாக நின்ற நண்பனின் அன்பிற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே, இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ உயில் பதிவு மையத்திற்குத் தனது நண்பனுடன் நேரில் சென்ற அந்த இளைஞர், இந்த உயிலைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து உயில் பதிவு மையத்தின் அதிகாரிகள் கூறுகையில்:
“மிகக் குறைந்த வயதில் இவ்வளவு பெரிய தொகையை நண்பருக்கு உயில் எழுதி வைப்பது இதுவே முதல்முறை.
சட்ட நடைமுறைகளின்படி இந்த இளைஞரின் மனநிலை மற்றும் உயிலின் சட்டப்பூர்வத் தன்மை ஆகியவை ஆராயப்பட்டு, அவரது விருப்பப்படியே அது பதிவு செய்யப்பட்டுள்ளது.”எனத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகச் சொத்துக்களுக்காகப் பெற்றோர்களும் உறவினர்களும் மோதிக்கொள்ளும் இந்த நவீன உலகில், 19 வயது இளைஞன் ஒருவன் தனது ஒட்டுமொத்த சொத்தையும் நண்பருக்கு எழுதிக் கொடுத்துள்ள இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.















