சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலங்களான ஆண்ட்ரூ டேட் (Andrew Tate) மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் (Tristan Tate) ஆகியோர் அமெரிக்காவின் மியாமி (Miami) நகரில் இரகசிய பிடியாணை ஒன்றின் கீழ் அமெரிக்க மார்ஷல்களால் (US Marshals)நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கம் விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய அரச வழக்குத் தொடரல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஏற்கனவே உள்ள 21 குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து, தற்போது மேலும் 38 புதிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கடந்த 2010 ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களாகும்.
அதன்படி, பாலியல் துஸ்பிரயோகம் , பாலியல் சுரண்டலுக்காக ஆள் கடத்தலை வழிநடத்தியமை, தாக்குதல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்களுக்கெதிராக பதியப்பட்டுள்ளன.
ஏற்கனவே ருமேனியாவில் மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் டேட் சகோதரர்களுக்கு, அமெரிக்காவில் நடந்துள்ள இந்தத் திடீர் கைது நடவடிக்கை மற்றும் பிரித்தானியாவின் புதிய வழக்குகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
மியாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இவர்களைத் தங்களின் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நாடு கடத்தல் சட்ட நடைமுறைகளைப் பிரித்தானிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.














