எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டம் இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, பாரிய அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு குறித்து ஆராய்வதற்காக, அனைத்து எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் இன்று மாலை விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாமல் ராஜபக்சவும் இதில் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, நாட்டில் நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பதும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதும் இந்தக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இன்றைய இந்த சந்திப்பில் பல்வேறு கருத்துக்கள் பறிமாறப்பட்டதுடன் சில முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தது.













