ஸ்கொட்லாந்தின் கெய்ர்ன்கார்ம்ஸ் (Cairngorms) தேசிய பூங்கா பகுதியில் கடந்த 10 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் பாரிய காட்டுத்தீ, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
காட்டுத்தீ காரணமாக ஹைலண்ட்ஸ் பகுதியிலுள்ள சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரவி வரும் புகை மற்றும் தீயின் தீவிரம் காரணமாக, அப்பகுதி மக்கள் தாங்கள் “கோபம், ஏமாற்றம் மற்றும் விரக்தியில் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர். தீயின் பரவலை சிலர் “பேரழிவுக்கு ஒப்பானது” என விவரித்துள்ளனர்.
இந்தக் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் சிறப்பு காட்டுத்தீ அணைப்பு வாகனங்கள், கடினமான நிலப்பரப்புகளில் இயங்கக்கூடிய வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு இணைப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வின்னி, நிலைமையை சமாளிக்க பிரித்தானிய அரசிடம் ராணுவத்தின் வான்வழி உதவியை கோரியுள்ளார். தற்போது தீ இன்னும் “பெரிய மற்றும் தீவிரமான அவசரநிலையாக” தொடர்கின்ற போதிலும், சனிக்கிழமை பிற்பகலில் நிலைமையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
















