அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வையொட்டி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்டு நெல் கொள்வனவுச் செயற்பாடுகள், கொள்வனவு செய்யப்படும் நெல்லின் தரம் மற்றும் அதன் ஈரப்பத அளவு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். என். எம். மனாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்நடவடிக்கையின் போதுஇ பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த விவசாயிகள் தங்களது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் ஒப்படைத்தனர்.
இடைத்தரகர்களின் சுரண்டல்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தகுந்த நியாயமான விலையை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்போது நெல் கொள்வனவுச் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதேச செயலாளர் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தகுதிவாய்ந்த தரமான நெல்லைக் கொண்டுவந்து ஒப்படைத்து நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகளிடம் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம். எஸ். எம். நளீர்இ நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான உள்ளூர் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்















