பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில், பள்ளிக் கல்வி முறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பல்கலைக்கழக கல்விப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து விலகி, அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள தொழில்துறை தேவைகளுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை அதிகமாகத் தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படவுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், சமூக மரியாதையைப் பெறவும் கல்விசார் பாதையே ஒரே வழி என்று நீண்ட காலமாக இளைஞர்களிடம் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த அணுகுமுறை பலரின் திறமைகளை புறக்கணித்துள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கும் கல்விசார் படிப்புகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பத் தகுதிகளைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு இதுவரை பள்ளி அமைப்பு போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம், பள்ளியை முடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களின் திறமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தெளிவான தொழில் பாதை உருவாக்கப்படும் எனவும், எந்த மாணவரும் எதிர்காலம் குறித்து குழப்பத்திலோ அல்லது வாய்ப்பின்றிய நிலையிலோ விடப்பட மாட்டார்கள் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய கல்வி அமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் திறமையான பணியாளர்களை உருவாக்கும் முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.



















