இங்கிலாந்தில் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை செயலாளர் அலெக்ஸ் நோரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அரசின் முன்கூட்டிய கைதிகள் விடுதலை கொள்கையை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் ஆண்டி பர்ன்ஹாமின் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டது.
இந்த விரைவான மீளாய்வின் பின்னர், பாலியல் குற்றவாளிகள் மற்றும் சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் முன்கூட்டியே விடுதலை பெறும் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஆரம்பத்தில் சுமார் 6,000 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அலெக்ஸ் நோரிஸ் தெரிவித்தார்.
“ஒவ்வொரு சாதாரண மாதத்திலும் சுமார் 4,500 பேர் சிறைகளில் இருந்து வெளியேறுகின்றனர். அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய திட்டத்தின் அளவு புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது” என அவர் கூறினார்.
மேலும், முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளை கண்காணிக்கும் பொறுப்பு வகிக்கும் பரோபேஷன் (Probation) சேவைகள், இந்த மேலதிக பணிச்சுமையை திறம்பட கையாளும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சிறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாகவே இந்த முன்கூட்டிய விடுதலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதேவேளை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















