நான்கு முக்கியத் திட்டங்கள் நிறைவடைவதன் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பு 132 கிலோ மீட்டர்கள் வரை விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டத்திலுள்ள கடவத்த – மீரிகம பகுதி (37 கி.மீ.) மற்றும் அதன் மூன்றாம் கட்டத்திலுள்ள பொத்துஹெர – கலகெதர பகுதி (33 கி.மீ.) ஆகியவை தற்போது கட்டுமானத்தில் உள்ளன.
குருணாகல்–தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணிகள், குருணாகல்–கலேவெல பகுதி (38 கி.மீ) மூலம் 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
233 பில்லியன் ரூபா பெறுமதியான இத்திட்டம், 12 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் கீழ் தொடங்கப்படும்.
உள்ளூர் கட்டுமான நிறுவனங்களால் இதன் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.
மேலும், 24 கி.மீ நீளமுள்ள ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளும் இவ்வருடம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு, முதல் முறையாக இலங்கை அரசின் உள்நாட்டு நிதி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.













