அயகம, இந்தலவத்த பகுதியிலுள்ள வன முகாமொன்றின் 300 அடி உயரமான செங்குத்தான பாறை விளிம்பிலிருந்து தவறி விழுந்ததில் 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அயகம – தும்பர, மணன பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இந்தலவத்த ‘காலே கோயில்’ வன முகாமின் நுழைவாயிலில் அவரது காலணிகளும் குடையும் கண்டெடுக்கப்பட்டன.
பின்னர், அயகம பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து நேற்று (15) ட்ரோன் (Drone) கேமராக்கள் மூலம் நடத்திய சோதனையில், 300 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை இடுக்கில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும், நிலப்பரப்பின் கடினத்தன்மை காரணமாக உடலை உடனடியாக நெருங்க முடியாமல் நேற்றிரவு வரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனையடுத்து, இன்றைய தினம் (16) இராணுவக் கமாண்டோப் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்பதற்கான சிறப்புச் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







