தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறைக் காலம் காரணமாகக் குழந்தைகளிடையே பட்டம் விடும் பொழுதுபோக்கு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான விபத்துகளும் கணிசமாக உயர்ந்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் பதில் இயக்குநரும் விசேட மருத்துவருமான வைத்தியர் பிரதீப் ரத்னசேகர எச்சரித்துள்ளார்.
பட்டம் விடுவது மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக இருந்தபோதிலும், போதிய பாதுகாப்பின்றிச் செயல்படும் போது கடுமையான காயங்களுக்கும் உயிராபத்துகளுக்கும் வழிவகுக்கும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாகக் குழுக்களாகப் பட்டம் விடும் போது ஏற்படும் மோதல்கள், உயரமான பகுதிகள் மற்றும் மொட்டை மாடிகளிலிருந்து தவறி கீழே விழுதல் போன்ற சம்பவங்களால் ஆபத்தான காயங்கள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் பட்டத்தின் நூல்கள் படுவதால், நூலின் வழியே மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் கடுமையான தீக்காயங்களுக்கும் மின் அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றனர்.
இவ்வாறான மின் அதிர்ச்சிகளால் கைகள், நரம்புகள் மற்றும் திசுக்கள் கடுமையாகச் சேதமடைந்து, பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயர் மின்னழுத்தக் கம்பிகளுடனான தொடர்பு உடனடி உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, மின் கம்பிகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குழந்தைகள் பட்டம் விடுவதைத் தடுப்பதில் பெற்றோர்களும் பெரியவர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரதீப் ரத்னசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிள்ளைகளின் பொழுதுபோக்கைப் போன்று அவர்களின் உயிர் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்பதால், முழுச் சமூகமும் பொறுப்புடன் செயல்பட்டு இவ்வாறான அபாயகரமான விபத்துகளைத் தவிர்க்க முன்வர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.















