நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் இடையிலான இமயமலை எல்லையில், புதன்கிழமை (26) ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பாறைகளும் சேறும் ஆற்றில் சரிந்து விழுந்தன.
இதனால் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு மலைப்பகுதி நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து பலரைக் பலிகொண்ட நிலையில், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் பிரபலமான மலைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து, காணாமல் போன 400-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளில் சுமார் 340 வெளிநாட்டினரும் அடங்குவர் என்று நேபாள சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இதுவரை உயிரிழந்தவர்களின் சுமார் 157 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளக் காவல்துறை புதன்கிழமை இரவு தெரிவித்தது.
எல்லையில் பேரலைகளும் இடிபாடுகளும் டஜன் கணக்கான மக்களை அடித்துச் செல்வதை சரிபார்க்கப்பட்ட காணொளிகள் காட்டின.
மேலும், சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகளும் இதைவிட மிக அதிகமான உயிரிழப்புகளும் பெரும் அழிவும் ஏற்படக்கூடும் என அஞ்சுகின்றனர்.
உயிரிழப்புகளை தவிர நேபாளத்தில் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

சீனாவுடனான நேபாள எல்லையில் உள்ள ராசுவாகதி (Rasuwagadhi) பகுதியில், போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றின் கிளை நதியான லெண்டேவின் (Lhende) நீரோட்டத்தை ஒரு பனிப்பாறை உருண்டு வீழ்ந்து தடுத்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இந்த வெள்ளப்பெருக்கு, முதலில் டிமுரே (Timure) கிராமத்தைத் தாக்கியது.
வெள்ளம் கீழ்நோக்கிப் பாய்வதற்கு முன்பே, நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வந்த அந்தப் பகுதியின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது.
அப்பகுதியில் மழை எதுவும் பெய்யாததால், இந்தத் பேரிடர் குறித்த எந்த முன்னெச்சரிக்கையும் மக்களுக்குக் கிடைக்கவில்லை; வெள்ளம் தாக்கியபோது அவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளம் சியாப்ருபெசி (Syaphrubesi) மற்றும் ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளை நோக்கி நகர்ந்தபோது, அது தனது பாதையில் இருந்த மக்கள், விலங்குகள், கட்டிடங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் கிட்டத்தட்ட முழுமையாக அழித்துச் சென்றது.
இந்த அனர்த்தத்தில் 391 வெளிநாட்டினர் மற்றும் 44 பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஒன்பது நீர்மின் திட்டங்களையும், அதே எண்ணிக்கையிலான வணிக வங்கி கிளைகளையும் அழித்துள்ளது.
வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும் 40 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அதேவேளையில், சேதமடைந்த தனியார் மற்றும் பொதுச் சொத்துகளின் முழுமையான விவரங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.
பாதிப்பின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நேபாளத்தின் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக இந்த வெள்ளம் அமையக்கூடும் என்று பாதுகாப்பு அதிகாரிகளும் பேரிடர் நிபுணர்களும் கருதுகின்றனர்.
1993-ல் சர்லாஹி, ரௌடஹத் மற்றும் மகவான்பூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,400 பேர் உயிரிழந்தனர்.
அந்த நிகழ்வு நீண்ட காலமாக நாட்டின் மிக மோசமான பேரிடருக்கான அளவுகோலாகத் திகழ்ந்து வருகிறது.
தற்போதைய வெள்ளப்பெருக்கு அந்தப் பேரழிவின் பாதிப்பையும் மிஞ்சக்கூடும் என்று கருதப்படுகிறது.












