இராஜதந்திர உறவுகளை மீண்டும் முன்னெடுக்கும் முயற்சியாக கட்டார் வெளியுறவு அமைச்சரும் பிரதமருமான ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman bin Jassim Al Thani), வியாழக்கிழமை (27) ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தெஹ்ரானின் வர்த்தகப் பங்காளிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கப்போவதாக வொஷிங்டன் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த பயணம் இடம்பெறுகின்றது.
பதற்றத்தைத் தணிப்பதும், பேச்சுவார்த்தைக்கான ஒரு களத்தை உருவாக்குவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
ஈரானின் வளைகுடா அண்டை நாடாகவும் அமெரிக்காவின் பங்காளியாகவும் உள்ள கட்டார், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே திரைமறைவுப் பேச்சுவார்த்தையாளராகச் செயல்பட்டதுடன், குறுகிய காலத்திற்குப் போர் நடவடிக்கைகளை நிறுத்திய ஜூன் மாதப் போர்நிறுத்தத்தை உறுதி செய்வதிலும் நேரடிப் பங்காற்றியுள்ளது.
போர் தொடங்கி ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது சண்டைகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டிருந்தாலும், இராஜதந்திர ரீதியில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான ஒரு வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைச் சுற்றியே இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
இந்த நீரிணையை ஈரான் ஒரு பேரம்பேசும் கருவியாகப் பயன்படுத்தி வருகிறது.
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள அந்த குறுகிய நீர்வழிப் பாதை குறித்த கருத்து வேறுபாடுகளே, அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துபோனதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தன.
பெப்ரவரி 28-அன்று போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழிப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.















