இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மோசமான வானிலை நிலவும் சூழலில் மேலும் 100-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சாலைகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு வசதிகள் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.















