சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் உருவான செயற்கை ஏரி உடைந்துபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த எச்சரிக்கை அப்பகுதிக்குக் கீழே வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக, புதிதாக உருவான ஏரிக்கு வரும் நீரின் அளவு அடுத்த மூன்று நாட்களில் சுமார் 3 மில்லியன் கன மீட்டராக அதிகரிக்கக்கூடும் என்று அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் வியாழக்கிழமை (27) இரவு தெரிவித்தது.
இதனால் ஏரி உடைந்து வெள்ள நீர் கீழ்நோக்கிப் பாய்ந்து, கியிரோங் துறைமுகம் (Gyirong Port) மற்றும் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள பிற இடங்களிலும் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாகவும் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்கனவே நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்துள்ள ஒரு பேரிடருக்கு, இந்த எச்சரிக்கை கூடுதல் ஆபத்தை சேர்க்கிறது.
இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி 48 மணி நேரத்திற்கும் மேலான நிலையில், நேபாளத்தில் குறைந்தது 469 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.















