கடந்த 24.08.2026 அன்று கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக பருத்தித்துறைக்கு இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக இயக்கப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் விளக்கமொன்றை எமது செய்திச் சேவைக்கு அனுப்பியுள்ளார்.
அன்றைய தினம் வழக்கமாக காலை 5.45 மணிக்கு கேவிலிலிருந்து புறப்படும் முதலாவது பேருந்து, 5.30 மணிக்கே சேவையை ஆரம்பித்துள்ளது. இதனால் வடமராட்சி கிழக்கின் பல கிராமங்களில் இருந்து பயணித்த உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் பேருந்தை தவறவிட்டனர்.
குறிப்பாக அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பருத்தித்துறை நகரிலுள்ள பல பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள், உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையங்களை சென்றடைவதற்காக அவசரமாக மாற்று வாகனங்களை நாடியும், சிலர் நடந்தும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எமது செய்திச் சேவை செய்தி வெளியிட்டிருந்த நிலையில், பருத்தித்துறை சாலை முகாமையாளர் எம்மைத் தொடர்புகொண்டு விளக்கம் வழங்கியுள்ளார்.
அவரது விளக்கத்தின்படி, தனியார் போக்குவரத்து சேவையினர் தமது சேவையை மாற்றியமைத்ததன் காரணமாக, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை போக்குவரத்துச் சபை தனது முதலாவது சேவையை அன்றிலிருந்து காலை 5.30 மணிக்கு ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் அதே நேரத்தில் சேவையை ஆரம்பித்ததாகவும், இதனால் குழப்பம் ஏற்பட்டதாகவும் சாலை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பருவகாலச் சிட்டைகளை பயன்படுத்தும் பயணிகள் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாத பொறுப்பற்ற செயலாகும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.













