ஜாவா கடற்பரப்பில் வார இறுதியில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போன 129 பேரை 600-க்கும் மேற்பட்ட இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தேடி வருவதாக திங்களன்று (13) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாகவே நீடிக்கிறது.
கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குச் சென்று கொண்டிருந்த ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலையில் மாயமானதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் பயணத்திற்குப் படகுச் சேவைகள் பெரிதும் நம்பப்படுகின்றன.
ஏனெனில், விமானப் பயணத்தை விடக் கடல்வழிப் பயணம் மலிவானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் உள்ளது.
இருப்பினும், இப்பகுதியில் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த மாதம் நிகழ்ந்த தனித்தனிச் சம்பவங்களில், நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரா தீவுப் பகுதியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; அதேவேளையில், சுற்றுலாத் தீவான பாலியில் இருந்து சென்ற மற்றொரு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.















