ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சவுதி அரேபியா பெய்ஜிங்கிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில், அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு சீனா தெஹ்ரானிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டுள்ளதாக இவிவகாரம் தெரிந்த மூன்று ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செங்கடல் கடற்கரை மற்றும் பாப்-எல்-மண்டேப் நீரிணைப் பகுதிகளில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை அதிக பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து ரியாத் சீனாவின் உதவியை நாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா வெளிப்படையாகவே நிதானம், பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இருப்பினும், அதன் தனிப்பட்ட செய்தி அந்தப் பொதுவான அறிக்கைகளைத் தாண்டிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா பெரிதும் சார்ந்திருக்கும் எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் மோதல் மேலும் பரவாமல் தடுக்க, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஈரான் உதவ வேண்டும் என்று பெய்ஜிங் விரும்புகிறது.
ஆலோசனைகள் குறித்துத் தகவலறிந்த மற்றும் பெயர் குறிப்பிடாத நிபந்தனையுடன் பேசிய அந்த வட்டாரங்கள், அந்தச் செய்தி எவ்வாறு கையளிக்கப்பட்டது என்பது குறித்தோ அல்லது புதன்கிழமையன்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது அது தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தோ எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலேயே இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையும் அமைதியும் தங்கியுள்ளன என்பதே தெஹ்ரானின் பதிலாக இருந்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹவுத்தி அமைப்பினர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தத் தவறினால், பெய்ஜிங் தெஹ்ரான் மீது பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கும் என்று சீன அதிகாரிகள் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் எதையும் விடுக்கவில்லை அல்லது அது குறித்து எந்தக் குறிப்பையும் அளிக்கவில்லை என்று அந்த மூன்று ஈரானிய வட்டாரங்களும் கூறின.
சீனா ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழ்வதுடன், அதன் மசகு எண்ணெயை வாங்கும் முக்கிய நாடாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.
2025-ஆம் ஆண்டில் ஈரானின் கடல்வழி மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவிற்கே சென்றன.
இது நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 1.4 மில்லியன் பீப்பாய்கள் ஆகும் என்று சரக்கு வர்த்தகத் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேப்லர்’ (Kpler)-இன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமனில் சவுதி அரேபியாவின் சுன்னி மத ஆதிக்கத்தை எதிர்த்து 1990-களில் உருவான ஹவுத்தி அமைப்பினருக்கு, ஈரான் ஆயுதங்களையும் பயிற்சியையும் நிதியுதவியையும் வழங்கி வருகிறது என்று ஈரானிய மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இவர்கள் தெஹ்ரானின் மேற்கத்திய மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட ‘எதிர்ப்பு அச்சு’ (Axis of Resistance) கூட்டணியின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.
ஏற்கனவே ஈரான் ஹார்முஸ் நீரிணையை முடக்கத் தொடங்கியுள்ள நிலையில், செங்கடல் மற்றும் பாப்-எல்-மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஹூதிகள் விடுக்கும் எந்தவொரு அச்சுறுத்தலும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை வெகுவாக மோசமடையச் செய்யும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
அத்துடன் இது பரந்த அளவிலான பிராந்திய மோதலுக்கான ஆபத்தையும் அதிகரிக்கிறது.
ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே நடைமுறையில் முடக்கப்பட்டுள்ள சூழலில், செங்கடலில் உள்ள கப்பல்கள் அல்லது துறைமுகங்கள் மீது ஹவுத்திகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அது மத்திய கிழக்கின் இரண்டு முக்கிய எண்ணெய் ஏற்றுமதிப் பாதைகளையும் ஒரே நேரத்தில் பாதிக்கும்.
இது எரிசக்தி நெருக்கடி மற்றும் அமெரிக்காவுடனான ஈரானின் பரந்த மோதல் ஆகிய இரண்டிலும் ஒரு புதிய முனையைத் திறந்துவிடும்.















