ஹார்முஸ் நீரிணையை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்க வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஈரான் இந்த இராஜதந்திர முயற்சியை முன்வைத்தது; கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் வாயிலாக இது அமெரிக்கர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏழு நாட்களுக்குள் அந்த முக்கிய நீர்வழியை மீண்டும் திறக்கவும் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.
உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றின் வழியாக எண்ணெய் விநியோகத்தைப் பாதித்து, உலகப் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஏழு மாத கால மோதலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், ஈரான் தரப்பினர் இந்த நீரிணை விவகாரம் குறித்துத் தங்கள் போட்டியாளரான சவுதி அரேபியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்த ஒப்பந்தமானது அந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஏழு நாள் காலக்கெடுவையும், பிராந்திய அளவிலான மோதல்களில் தற்காலிக இடைநிறுத்தத்தையும் தொடக்கி வைக்கும் என்று தெரிவித்தார்.
“ஓர் ஒப்பந்தத்தை எட்டி ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் அமெரிக்கா தரப்பில் உண்மையான ஆர்வம் இருந்தால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இப்போது தயாராக உள்ளன,” என்று அராக்சி கூறினார்.
அமெரிக்கா ஒப்புக்கொண்டால், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் “பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்கள்” குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம் என்றும் அராக்சி தெரிவித்தார்.
இதில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களும் இடம்பெறக்கூடும்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாது என்று ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்; அதேவேளையில், அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட, தனது அணுசக்தித் திட்டத்தில் ஈரான் எந்தவித நெகிழ்வுத்தன்மையையும் காட்டாது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல் அல்லது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வது உள்ளிட்ட தனது உரிமைகள் தொடர்பாக ஈரான் எந்தச் சலுகையையும் அளிக்காது என்று அந்த அதிகாரி கூறினார்.
இருப்பினும், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் மோதல்களை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது.
இத்திட்டத்தின்படி, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவித்தல் மற்றும் எண்ணெய் மீதான தடைகளை விலக்குதல் ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று அராக்சி தெரிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், மத்தியஸ்தர்கள் வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை முன்னதாக “நேர்மறையானவை மற்றும் ஆக்கபூர்வமானவை” என்று குறிப்பிட்டிருந்தார்.















