பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளும் இந்தியாவின் உரிமை நிலைநாட்டப்படும் என்றும், பயங்கரவாதம் எனும் தீமையுடன் நட்பும் நல்லெண்ணமும் இணைந்து இருக்க முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று (26) கூறினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாகிஸ்தான் உண்மைகளைத் தவறாகச் சித்தரித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட 81 ஆவது கூட்டத்தொடரில் நடைபெற்ற பொது விவாதத்தின்போது இந்தியாவின் தேசிய அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய அவர், “நேற்று (நேற்று முன்தினம்) தொடர்ச்சியாகத் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஒரு தரப்பு, இந்தப் பேரவையின் முன் உண்மைகளைத் திரித்துக் கூறியது.
பயங்கரவாதத்தை இயல்பான ஒன்றாகக் காட்டவும், அதன் விளைவுகளிலிருந்து விலக்கு கோரவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், அந்த வாதங்கள் எடுபடாது என்று கூறினார்.
பாகிஸ்தானின் பெயரையோ அல்லது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அதன் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆற்றிய உரையையோ குறிப்பிடாமல் அவர் கூறியதாவது:
“பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை செயல்படுத்தப்படும், பயங்கரவாதமும் நட்பும் நல்லெண்ணமும் ஒன்றிணைந்து இருக்க முடியாது, அத்தகைய அடிப்படையிலான புரிதல்கள் இயல்பாகவே கேள்விக்குள்ளாக்கப்படும்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களே தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம் எனும் தீமை.
இது எல்லை தாண்டிய நோக்கத்துடன் அரசால் தூண்டப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும் என்பது, உலகளாவிய ஒழுங்கமைப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக அமைகிறது.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் அரசுகள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.
பயங்கரவாதம் குறித்த நமது ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ அணுகுமுறையில் எவ்விதத் தளர்வும் இருக்கக்கூடாது.
குறிப்பாக, அதன் நிதிசார் அம்சங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவை முறியடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மேடையைப் பயன்படுத்திய ஷெரீப், இந்தியாவுடனான 2025 ஆம் ஆண்டு மோதலின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட “சரியான நேரத்திலான தலையீட்டிற்கு” அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
2025 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா கடந்த ஆண்டு மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையைத் தொடங்கியது.
எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டையும் புது டொல்லி தொடர்ந்து மறுத்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













