யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் இன்று (27) காலை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 1.5 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர தெரிவித்தார்.
இலங்கை கடற்படை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் குறித்து நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, பிரதி அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த அளவு சுமார் 81 கிலோ கிராம் என்றும், அதில் ஏறக்குறைய 35 கிலோ கிராம் ஹெரோயினும், சுமார் 45 கிலோ கிராம் ‘ஐஸ்’ (படிக வடிவிலான மெத்தாம்பேட்டமைன்) போதைப்பொருளும் அடங்கும்.
அண்மைய காலப்பகுதியில் வடக்குப் பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களிலேயே இதுவே மிகப்பெரிய தொகுதி என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 75 பில்லியன் ரூபாயாகும் என்றும், அதேவேளையில் இவ்வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 56 பில்லியன் ரூபாயாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













