அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழுத்தத்தைத் தொடர்ந்து, அவசரக்கால இருப்பிலிருந்து 100 மில்லியன் பீப்பாய் டீசல் மற்றும் மசகு எண்ணெயை விடுவிக்கவும், எரிசக்தி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருக்கவும் ‘ஜி-7’ (Group of Seven) நாடுகள் வெள்ளிக்கிழமையன்று (02) ஒப்புக்கொண்டன.
அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படக்கூடும் என்று ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்ததைத் தொடர்ந்து, அவசரக்கால டீசல் இருப்பைக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.
இத்தகைய தடை, அமெரிக்க டீசலை அதிகம் சார்ந்திருக்கும் ஐரோப்பாவிற்கான விநியோகத்தை வெகுவாகக் குறைப்பதோடு, அந்த ஒன்றியத்திற்குப் பெரும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
அலபாமாவுக்குப் புறப்படுவதற்கு முன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், டீசல் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதிக்காது என்று தெரிவித்தார்.
அத்தகைய தடையை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதற்குத் தான் ஆதரவளிப்பதாகவும் கடந்த இரண்டு வாரங்களில் பலமுறை அவர் கூறியிருந்த போதிலும், உண்மையில் அத்தகைய திட்டம் பரிசீலனையில் இருக்கவில்லை என்று அவர் கூறினார்.
அதேநேரம், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, சர்வதேச எரிசக்தி முகமை வாயிலாக 100 மில்லியன் பீப்பாய் அளவிலான இருப்பை ஒருங்கிணைந்த முறையில் வெளியிடுவதன் மூலம் எங்கள் கடப்பாடுகளை நாங்கள் செயல்படுத்துவோம் என்று G7 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
புதிய ஒப்பந்தத்தின் கீழ் வெளியிடப்படவுள்ள பெட்ரோலியத்தில், கடந்த மார்ச் மாத ஒப்பந்தத்தின் எஞ்சிய இருப்பிலிருந்து எவ்வளவு அளவு பயன்படுத்தப்படும் என்பது குறித்துத் தெளிவற்ற நிலை உள்ளது.
400 மில்லியன் பீப்பாய் தொடர்பான அந்த ஒப்பந்தத்தில், சுமார் மூன்றில் இரண்டு பங்கு அளவை உறுப்பு நாடுகள் ஏற்கனவே வெளியிட்டுவிட்டதாக சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக பணிப்பாளர் ஃபாத்திஹ் பிரோல் (Fatih Birol) இந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த வெளியீட்டு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கி நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும், இதில் குறிப்பிடத்தக்க அளவிலான டீசல் அடுத்த 20 நாட்களுக்குள் G7 உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளால் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
வெளியிடப்படவுள்ள மசகு எண்ணெய், டீசல் மற்றும் பிற பொருட்களின் அளவுகள் குறித்த விவரங்களையோ அல்லது இதில் எந்தெந்த நாடுகள் பங்கேற்கும் என்பதையோ அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.














