கனடா நாட்டைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ஏனி கார்சன், 76, இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் நோபலின் நினைவாக, 1901ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பழங்கால செம்மொழி இலக்கியங்களுடன் நவீன கால வடிவங்களை இணைத்து, துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புகளை வழங்கியதற்காக வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஏனி கார்சன் நோபல் பரிசை வென்றுள்ளார்.
பண்டைய கிரேக்க இலக்கியம், தொன்மக் கதைகள் மற்றும் செம்மொழி பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, அவற்றுடன் ஒரு விளையாட்டுத்தனமான உரையாடல் பாணியை இவர் தன் இலக்கியங்களில் கையாண்டுள்ளார்.
‘ஆட்டோபயோகிராபி ஆப் ரெட்’, ‘தி பியூட்டி ஆப் தி ஹஸ்பண்ட்’ போன்ற கவிதை வடிவிலான நாவல்கள் சர்வதேச அளவில் பெரிதும் கவனம் ஈர்த்தவை.
அடுத்ததாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசை, நம் நாட்டைச் சேர்ந்த ரபீந்திரநாத் தாகூர், 1913ல் வென்றார். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வி.எஸ். நெய்ப்பால், 2001ல் பெற்றார்.
















