தென்கொரியாவின் இரண்டாவது பெரிய நகரமான பூசான் (Busan) நகரில், துறைமுகத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் சிக்கியுள்ள சுமார் 10 அடி நீளமுடைய பெண் சுறா ஒன்று அந்த நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பூசானில் அமைந்துள்ள புக்ஹாங் நீர்முனைப் பூங்காவிற்கு (Bukhang Waterfront Park) அருகிலுள்ள கால்வாயில் இந்தச் சுறா முதன்முதலில் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அது காணப்படும் இடத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ‘புகாங்கி’ (Bukangi) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சுறாவைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் தென்கொரிய ஜனாதிபதியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தச் சுறா பூசான் நகரின் கௌரவத் தூதராகவும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கால்வாயில் சிக்கியுள்ள சுறாவை மீண்டும் கடலுக்குள் அனுப்புவதற்காகக் கடலோரக் காவல்படையினரும் தீயணைப்புத் துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட தடுப்புகள் மற்றும் பொறிகள் வெற்றியளிக்காததைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சுறா தானாகவே கடலுக்குத் திரும்பும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்திற்குள் நீரின் வெப்பநிலை கணிசமாகக் குறைவதற்கு முன்னர் சுறா கடலுக்குத் திரும்ப வேண்டியது அவசியம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறு கடலுக்குத் திரும்பத் தவறினால், கடுமையான குளிரால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

















