வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பாடசாலைகளில் உள்ள மோசமான வசதிகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று (24) இடம்பெற்றதாகவும், இதன்போது சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாள் முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும், மாலை வேளையில் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
கூட்டத்தைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரைப் பிரயோகம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கடந்த வார இறுதியில் பிரான்ஸில் பதிவான கடுமையான வன்முறைகள், தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் சூறையாடல்கள் மீண்டும் நிகழாத வண்ணம் பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த போராட்டங்களில் சுமார் 4,10,000 பேர் பங்கேற்றனர்.
அதேவேளை தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை சுமார் 8,00,000 வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளன.
அண்மைய போராட்டங்களின் போது ஏற்பட்ட பெரும் சொத்து சேதங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தடுப்பதற்காக, பிரெஞ்சு அரசாங்கம் சுமார் 70,000 காவல்துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியதுடன் பல நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.















