செம்மணிப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்.ராஜ் சோமதேவவின் அறிக்கை இடைக்கால அறிக்கைதான். அது இறுதி அறிக்கை அல்ல. மேலும் அந்த அறிக்கையில் பல இடங்களில் “இருக்கலாம்” என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.சில விடயங்களில் உரிய துறைசார் நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொண்டுதான் முடிவுக்கு வரலாம் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.எனவே அந்த அறிக்கையில் கூறப்பட்டவைகள் அனைத்தும் இறுதியானவை அல்ல.எனினும்,இனி வரக்கூடிய அறிக்கைகளிலும் முடிவுகளிலும் அது செல்வாக்குச் செலுத்தும் என்பதும் உண்மை.
அந்த அறிக்கையில் பிரதானமாக,எங்கே பேராசிரியர் பிசகுகிறார் என்றால், தொகையாக அவ்வளவு எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடத்தில் புதைக்கப்பட்டவர்கள் என்னென்ன காரணங்களுக்காக அவ்வாறு “அவசரமாக” புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கூறும் இடத்தில் அவர் இயற்கை அனர்த்தங்களைக் கூறுகிறார்.பெருந்தொற்று நோய்களைக் கூறுகிறார். ஆனால் யுத்த அனர்த்தம் என்று ஒரு விடயத்தை மட்டும் வசதியாக மறந்து விடுகிறார்.அறிக்கையில் பிரதான பலவீனமாகவும் அறிக்கையை சர்ச்சைக்குரியதாகவும் மாற்றும் இடம் அதுதான்.
அந்த விடையத்தில்தான் அவருடைய அறிக்கை இதற்கு முன் அவர் வெளியிட்ட முதலிரண்டு இடைக்கால அறிக்கைகளோடும் முரண்படுகிறது.அதைவிட முக்கியமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையோடும் முரண்படுகிறது.அதாவது செம்மணிப் புதைகுழிக்கு உள்ள அரசியல் பரிமாணத்தை நீக்கும் உள்நோக்கம் அந்த அறிக்கையில் உண்டா ? என்று தமிழ் மக்களைச் சந்தேகிக்க வைக்கிறது.
செம்மணியைப் போன்ற எனைய புதகுழிகளிடமிருந்து செம்மணி எங்கே வேறுபடுகிறது என்பதற்கு பேராசிரியர் கூறும் விளக்கம்,இந்தப் புதை குழியில் உடல்கள் ஏதோ ஒரு விகிதமளவுக்கு பண்பாட்டு வழமைகளைப் பின்பற்றிப் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான்.ஆனால் அதே அறிக்கையில் வேறு சில இடங்களில் அவ்வாறான பண்பாட்டு நம்பிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் அவர் கூறுகிறார்.இங்கே கேள்வி என்னவென்றால் எப்படிப்பட்ட பண்பாட்டு நம்பிக்கைகளை செம்மணி புதைகுழிக்குள் காணப்படும் எலும்புக்கூடுகள் பிரதிபலிக்கின்றன? என்பதுதான்.
அது ஒரு சுடலை.அங்கே உடல்கள் தகனம் செய்யப்படுமே தவிர புதைக்கப்படுவது குறைவு.சட்ட ரீதியாகச் சந்தேகிக்கப்படும் இறப்புக்களில் உடல்கள் புதைக்கப்படுவதுண்டு.ஏரிக்கப்படுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அவ்வாறு புதைக்கப்படுவது என்பது அருந்தலானதே தவிர பொதுவானதோ பெரும் போக்கோ அல்ல.ஏனென்றால் சித்துப் பாத்தி ஒரு சுடுகாடு; இடுகாடு அல்ல.
ஒரு சுடுகாட்டுப் பிரதேசத்தில் உடல்கள் புதைக்கப்பட்டமை என்பது அசாதாரணம். அந்த அசாதாரண நிலைமையை பேராசிரியர் இயற்கை அழிவு அல்லது பெருந்தொற்று என்று கூறுகிறார்.இங்கே பின்வரும் கேள்விகளை எழுப்பலாம்.
முதலாவது கேள்வி,பெருந் தொற்று காரணமாக உடல்கள் புதைக்கப்படுமா ?எரிக்கப்படுமா? பொதுவாக ஏரிக்கப்படுவதுதான் வழமை.அப்படி எரிக்கப் போனதால்தான் கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் முஸ்லிம்களோடு கோத்தாபய அரசாங்கத்துக்கு முரண்பாடுகள் ஏற்பட்டன.
இரண்டாவது கேள்வி,சித்துப் பாத்தி மயானத்தில் அவ்வாறு உடல்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தனவா? இந்தக் கேள்விக்கு விடை காண்பது என்றால் சித்துப் பாத்தியின் வயதைக் கணிக்க வேண்டும்.
சித்துப் பாத்தி மயானமானது அரச பதிவுகளில் சித்துப்பாத்தி சுடலை என்று 1972ல்தான் பதியப்பட்டிருக்கிறது.எனினும் அதற்கு முன்பு 1950களின் நடுப்பகுதியில் அருகில் இருந்த ஒரு காணிப் பதிவின்படி இது ஒரு சுடலையாக இருந்திருக்கிறது.அதற்கு முன்னால் போனால்,பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1930களில் அது ஒரு பொது நிலமாக பிரயோகத்தில் இருந்திருக்கிறது என்ற தகவலையும் ஊரவர்கள் கூறுகிறார்கள்.இந்தக் கணக்கின்படி பார்த்தால், சித்துப் பாத்தியின் வயது,ஆக மிஞ்சிப்போனால் 90 ஆண்டுகளைத் தாண்டாது.
மூன்றாவது கேள்வி,அவ்வாறு சித்துப்பாத்தியின் 90 ஆண்டு காலப் பரப்புக்குள் யாழ்ப்பாணத்தைத் தாக்கிய இயற்கைப் பேரழிவுகள் எத்தனை? பெரும் தொற்று நோய்கள் எத்தனை ?
அதிகம் இல்லை. 1934, 35 களில் மலேரியா நாட்டைத் தாக்கியிருக்கிறது. ஆனால் அதனால் யாழ்ப்பாணத்தில் உயிர்ச்சேதம் அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது.அதற்குப்பின் சுனாமி தாக்கியது.அப்பொழுது உடல்களை கரையோரங்களில்தான் புதைத்தார்கள்.சித்துப் பாத்திக்கு கொண்டு வரவில்லை.அதன்பின் கோவிட்-19.அங்கு உடல்கள் எரிக்கப்பட்டன. புதைக்கப்படவில்லை.
அப்படியென்றால் கடந்த 90 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தைத் தாக்கிய இயற்கைப் பேரிடர்கள் அல்லது பெருந்தொற்று நோய்கள் போன்றவற்றால் தொகையாக கொல்லப்பட்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டிருப்பதாக எப்படிச் சந்தேகிப்பது?
நாலாவது கேள்வி, தமிழ் மக்களின் கடந்த 90 ஆண்டு கால வாழ்வில் ஏற்பட்ட அனர்த்தங்கள் என்று பார்த்தால்,இயற்கை அனர்த்தங்கள்,பெருந்தொற்று நோய்கள் மட்டும்தானா? அவற்றைவிட பாரதூரமான உயிரச்சமான பேரழிவை ஏற்படுத்திய அனர்த்தங்கள் இருக்கவில்லையா? கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலான யுத்தம் எந்த வகைக்குள் அடங்கும் ?
போர்க்காலத்தில்தான் யாழ்ப்பாணத்தவர்கள்,இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டன.படை நடவடிக்கைகளின் போது அல்லது பேரிடப்பெயர்வுகளின்போது அல்லது தொடர் இடர்ப்பெயர்களின் போது அவ்வாறு இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு அவகாசம் இருக்கவில்லை.அல்லது உரிய முறைப்படி பண்பாட்டு வழமைகளின்படி புதைப்பதற்கு, எரிப்பதற்கு அவகாசம் இருக்கவில்லை.
ஐந்தாவது கேள்வி,அவ்வாறு உடல்களை தமிழ் மக்கள் புதைத்தார்கள் என்பதற்குமப்பால், அந்த உடல்களுக்கு உரியவர்களைக் கடத்திக் கொலை செய்தவர்கள் புதைத்திருக்கிறார்கள்.கிரிஷாந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சோமரட்ன ராஜபக்ச அதை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.அவ்வாறு கடத்திக் கொலை செய்த நபரை புதைக்கும் போது அல்லது எரிக்கும் போது கொலையாளிகள்அந்த உடலுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில்லை.
செம்மணிப் புதை குழியை வெளியே கொண்டு வந்த கிரிசாந்தி படுகொலை விடயத்திலும் கிரிசாந்தியின் உடலும் அவருடைய குடும்பத்தவர்கள் மற்றும் அயலவர்களின் உடலும் அவ்வாறு உரிய மரியாதைகளோடு புதைக்கப்பட்டிருக்கவில்லை.அதுபோன்ற பல நூறு உடல்களை உரிய மரியாதைகள் இன்றிப் புதைத்ததாக இப்பொழுது சிறையில் இருக்கும் சோமரட்ன ராஜபக்ஷ திரும்பத்திரும்ப கூறியிருக்கிறார்.கடந்த வாரம்,அவரை மீண்டும் விசாரிப்பதற்கு குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
எனவே சோமதேவவின் அறிக்கையில் தமிழ்மக்கள் அதிகம் சந்தேகப்படும் இடம் அதுதான்.கடந்த 90 ஆண்டுகால அனர்த்தங்களைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் போர் என்ற விடயத்தை மட்டும் சுட்டிக்காட்டவில்லை.நவீன தமிழ் வரலாற்றில் ஈழத் தமிழர்கள் சந்தித்த அசாதாரண நிலைமைகளில் மிகவும் கொடுமையான ஒரு காலத்தை,அனுபவத்தை அந்த அறிக்கை ஊகமாகக்கூட சுட்டிக்காட்டவில்லை.ஆனால் அது அவருடைய முன்னைய இரண்டு அறிக்கைகளிலும் எதோ ஒரு விதத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.கடந்த ஆண்டு வெளிவந்த மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பார்கள்.விடை கிடைத்தால்தான் தங்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக அவர்கள் நம்புவார்கள்.பேராசிரியரின் அறிக்கை வெளிவந்தபின் அது தொடர்பாக எழுதப்பட்ட செய்திக் கட்டுரைகளில், குறிப்பாக தென்னிலங்கை மைய ஆங்கில ஊடகங்களில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது. செம்மணி தொடர்பில் விஞ்ஞானபூர்வமான முடிவுகளை விடவும் அரசியல் உள்நோக்கம் உடைய விடையங்கள்தான் தலைப்புகள் ஆக்கப்படுகின்றன என்பதே அது. அந்த விடயம் உணர்ச்சிகரமானதாக உணர்வுபூர்வமானதாக காணப்படும் போதுதான் அதை அரசியலாகக் கையாளும் நிலைமைகள் ஏற்படுகின்றன. செம்மணி தொடக்கத்தில் இருந்தே உணர்வுபூர்வமானதுதான். உணர்ச்சிகரமானதுதான்.எனவே இந்த விடயத்தில் உள்ளூர் உணர்வுகள் உணர்ச்சிகரமானவைகளாக,அரசியல் கலப்பு உள்ளவைகளாக இருக்கும் என்று சந்தேகித்தால்,அதற்கு ஒரே வழி,வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளை பெறுவதுதான்.அதைத்தான் தமிழ் மக்கள் பன்னாட்டு விசாரணை பொறிமுறை வேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள்.ஒரு யானையின் மரணத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டு விசாரணை வேண்டும் என்று கேட்கும் ஒரு நாட்டில், மனிதப் புதை குழிகளுக்கு அவ்வாறான விசாரணைகள் வேண்டும் என்று தமிழ் மக்களும் கேட்கிறார்கள்.














