28 ஆவது பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) பிற்பகல் ஆன்டிகுவா மற்றும் பார்பி யூ டாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அன்டிகுவா மற்றும் பார்பியூடாவின் செயின்ட் ஜோன்ஸில், 2026 நவம்பர் 1 முதல் 4 வரை நடைபெறவுள்ள 28 ஆவது பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்கவுள்ள இலங்கைத் தூதுக்குழுவிற்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமை தாங்கவுள்ளார்.
“செழுமைமிக்க பொதுநலவாயத்திற்காகக் கூட்டாண்மைகளையும் முதலீடுகளையும் துரிதப்படுத்துதல்” (Accelerating Partnerships and Investment for a Prosperous Commonwealth) என்ற கருப்பொருளின் கீழ், பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 56 நாடுகளின், அரசாங்க மற்றும் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் இணைந்து கொள்வார்.
இந்த உச்சிமாநாட்டின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவேற்று அமர்வுகள் மற்றும் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடு, டிஜிட்டல் மாற்றம், இளைஞர் வலுவூட்டல், காலநிலை மாற்றம் மற்றும் நற்பரிபாலனம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இலங்கைத்தரப்பு தனது நிலைப்பாடுகளையும், முன்னுரிமைகளையும் முன்வைக்கும்.
உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இலங்கையின் இராஜதந்திர, வர்த்தக மற்றும் அபிவிருத்தி கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி அமரசூரிய பல நாட்டுத் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் பிற அரசியல், வணிகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும், முதலீடு சார்ந்த அபிவிருத்தி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இலங்கையின் முன்னுரிமைகளையும், கண்ணோட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில், பிரதமர் பொதுநலவாய மகளிர் மன்றம், பொதுநலவாயத் தலைவர்கள் மற்றும் சி.இ.ஓ.க்கள் முதலீட்டு உச்சிமாநாடு மற்றும் உலகளாவிய கண் சுகாதார உச்சிமாநாடு ஆகியவற்றில் உரையாற்றவுள்ளார்.














