புதிய சட்ட முன் மொழிவுகள்: – நாடு எதை நோக்கிப் போகிறது? நிலாந்தன்.
“NPP அரசாங்கமும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறவிகளும் (இவர்களைச் சிலர் தீவிர வலதுசாரிகள் என்று அழைத்தாலும்,இவர்கள் ஏதோ பொம்மைகளை வைத்து விளையாடவே விரும்பியது போலத் தெரிகிறது) இணைந்து, PSTA மற்றும் வரவிருக்கும் பிற கடுமையான சட்டங்களை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து வருகின்றனர்.இந்த ‘பொம்மை விளையாட்டு’ நம் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பிவிட்டது” இவ்வாறு சமூக ஊடக வலைத்தளங்களில் எழுதியிருப்பவர் சுவாஸ்திகா அருளிங்கம்.சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களோடு எழுச்சி பெற்ற பெண் செயற்பாட்டாளர் அவர்.
நாட்டில் இப்பொழுது மூன்று புதிய சட்ட முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்டுள்ளன.அவை தொடர்பாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.இம்மாதம்,ஆறாம் திகதி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.இம்மாதம் 20ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான சட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அண்மையில் தமிழரசுக் கட்சியின் சிவஞானம், சுமந்திரன், சாணக்கியன் மூவரும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து முன்மொழியப்பட்டிருக்கும் சட்டங்கள் தொடர்பாக தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையிலும் 40 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரிசா.டி சில்வா கடந்த வாரம் முகநூலில் பதிவிட்டிருந்தார்.சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முக்கிய சட்டச் செயற்பாட்டாளர்கள் மேற்படி சட்டமூலத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
“முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு காலாவதியான சட்டக் கட்டமைப்பு” என்று கூறுகிறார் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவஸிறி.”1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட இந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது,அவை பயங்கரவாதத்தை அடக்கியதை விட மக்களின் அரசியல் சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்டங்களை நடத்தும் ஜனநாயக வழிகளை அடக்குவதற்கே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது புலனாகிறது. மறுபுறம்,1980களில் வடக்கிலும் தெற்கிலும் ஆயுதமேந்திய எழுச்சிகள் மேலும் தீவிரமடைவதற்கே இத்தகைய கடுமையான சட்டங்கள் காரணமாயினவே தவிர, அவற்றினால் வன்முறைகள் கட்டுப்படுத்தப்படவில்லை.”என்றும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவஸிறி மேலும் கூறுகிறார்.
அதுபோலவே,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட முன் மொழிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி சாலிய பீரிஸ், “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றுடன் ஒருவர் தொடர்புடையவரா என்பதைத் தீர்மானிக்கும்போது, அந்த நபரின் தலைமுடி அலங்காரம், பச்சைக் குத்தல்கள் அல்லது ஆடைகளை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள அனுமதிக்கும் ஏற்பாடும் இந்தச் சட்டமூலத்தில் இருப்பதாக” கூறியுள்ளார்.இவர் இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் முன்னாள் தலைவராகும்.
மேலும் “ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிபிஎஸ்பிளஸ் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்காக அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அதேசமயம்,பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட விடயங்களை உத்தேச ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான’ சட்டமூலத்திற்குள் உள்ளடக்க முயற்சிக்கிறது”என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“PTA சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA),சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் ஏற்பாடுகளை நீக்கும்” என்று கூறும் அவர்,”PTA சட்டத்தின் கீழ் இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டமை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறையினரிடையே சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான ஒரு சூழலை உருவாக்கியுள்ளதாகவும்” அவர் குற்றம் காட்டுகிறார்.
“எனினும்,அரசாங்கத்தினால் தனியாக முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்(ASP) பதவியிலிருந்து அதற்கு மேற்பட்ட பதவிகளிலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம்,அதேபோன்ற ஏற்பாடுகளை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகவும்” சாலிய பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
“இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்ட மசோதாவானது,போதுமான நீதித்துறை மேற்பார்வை அல்லது குற்றச் செயல்களுக்கான சான்றுகள் இன்றி நீண்டகால தடுப்புக் காவலைச் சாத்தியம் ஆக்குவதோடு, காவல்துறையினரால் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனைகளை அனுமதிப்பதன் மூலம் சித்திரவதையை ஊக்குவிக்கக்கூடும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குநர் எலைன் பியர்சன் எச்சரித்துள்ளார்.
“இந்தச் சட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், இதற்கு முன்னர் இதேபோன்ற கடுமையான சட்டங்கள் செய்ததைப் போலவே, இதுவும் கடுமையான உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.”என்றும்,“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் உண்டு;ஆனால்,அவ்வாறு செய்யும்போது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்,” என்றும் “இந்த மசோதா,ஜிஎஸ்பி+ (GSP+) வர்த்தகத் திட்டத்தின் கீழ் இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்காது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாக உணர்த்த வேண்டும்.” என்றும் எலைன் பியர்சன் கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்டிருக்கும் இரண்டு புதிய சட்டமூலங்களுக்கும் எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற பெரும்பாலான உலகப்பொது மனித உரிமை அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
எனினும் மேற்சொன்ன உலகப் பொது அமைப்புகள்,துறைசார் நிபுணர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் குற்றச்சாட்டுகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி அரசாங்கம் இப்பொழுது மேசையில் வைத்துள்ள சட்டங்களைச் சில திருத்தங்களோடு அல்லது திருத்தங்கள் இல்லாமலேயே நிறைவேற்றும் ஆபத்து அதிகம் உண்டு.
மேற்சொன்ன இரண்டு சட்ட முன்மொழிவுகள் மட்டுமல்ல,சிவில் சமூக செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக முன்மொழிக்கப்பட்ட “அரசுசாரா அமைப்புகள்(பதிவு மற்றும் மேற்பார்வை)சட்டமூலம் 2026” தொடர்பாகவும் சிவில் சமூகங்கள் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன
“புதியதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டம்,சிறிய சமூகக் குழுக்களைக்கூட அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடும். மரண உதவிச் சங்கங்கள் முதல் சீட்டுச் சங்கங்கள் மற்றும் லயன்ஸ் கழகங்கள் வரை, தங்கள் சமூகங்களுக்கு உதவுவதற்காக ஒன்றிணைந்து செயற்படும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படலாம்.இது நிதிக் குற்றங்களைத் தடுப்பதைப் பற்றியது மட்டுமல்ல.மாறாக,சிவில் சமூகச் செயற்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதைப் பற்றியது”
எனினும் மேற்சொன்ன உலகப் பொது அமைப்புகள்,துறைசார் நிபுணர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் குற்றச்சாட்டுகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி அரசாங்கம் இப்பொழுது மேசையில் வைக்கப்பட்டுள்ள சட்டங்களைச் சில திருத்தங்களோடு அல்லது திருத்தங்கள் இல்லாமலேயே நிறைவேற்றும் ஆபத்து அதிகம் உண்டு.யார் போராடினாலும் போராடவிட்டாலும் மேற்படி சட்டமூலங்களை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திடம் உண்டு.இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து அரசாங்கம் விரும்பிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்.எனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதற்காக அந்தச் சட்டம் மக்களுக்கு குறிப்பாக சிறிய தேசிய இனங்களுக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்று இல்லை.
எல்லா நாடுகளிலும் சட்டம் எனப்படுவது அங்குள்ள பெரும்பான்மை பலத்த கொண்ட அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகிறது.அது சொர்க்கத்தில் நிறைவேற்றப்படுவது அல்ல.சட்டங்களை அரசியல்வாதிகள்தான் நிறைவேற்றுகிறார்கள்.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக யார் இருக்கிறார்களோ அவர்கள் வைத்ததுதான் சட்டம்.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கூரான கத்தி ஆகிய பயங்கரவாத தடை சட்டமும் அப்படித்தான்.அவசரகாலச் சட்டமும் அப்படித்தான்.இப்பொழுது அரசாங்கம் மேசையில் வைத்திருக்கும் சட்டமூலங்களும் அப்படிப்பட்டவைதான்.தமிழ் மக்கள் மக்களுடைய எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்களுக்குச் சட்டங்கள் தேவை.அது பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகவும் இருக்கலாம். அவசரகாலச் சட்டம் ஆகவும் இருக்கலாம்.ஏன் பெருந்தொற்று நோய்க் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டமாகவும் இருக்கலாம்.
அதனால்தான் “சட்ட ரீதியானவை எல்லாம் நீதியானவைககளாக இருக்க வேண்டும் என்று இல்லை” என்று ஓர் ஆங்கில வாசகம் உண்டு.”அடிமை முறை சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது.ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான இன அழிப்பு சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது.தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் சட்டப்படிதான் முன்னெடுக்கப்பட்டது”.இலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான போர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வேட்டை பற்களுக்குள் சிக்கித் தப்பி பிழைத்த ஜேவிபிதான் இப்பொழுது ஆழம் அரசாங்கத்தின் அடித்தளமாக இருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று தமிழ் மக்கள்,முஸ்லிம் மக்கள் போராடியபோது ஜேவிபியும் அவர்களோடு காணப்பட்டது.அதே ஜேபிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது நாட்டை ஆள்வதற்கு ஒரு புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது.
“இன அடிப்படையிலான தேசியவாதம் நம் நாட்டில் இன்னும் மறைந்திருக்கவே செய்கிறது;அது முழுமையாக ஒழியவில்லை ” என்று விவசாயம்,கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளுக்கான அமைச்சர் கே.டி.லால்கந்த கூறியுள்ளார்.“வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்,அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எவரும் காண முடியும்.”….“ இது மீண்டும் தலைதூக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,”….“இத்தகைய போக்குகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்,தடுக்கப்பட வேண்டும்.”என்று அமைச்சர் லால்கந்த தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியின் தீர்மானிக்கும் சக்திகளில் லால்கந்தவும் ஒருவர்.அவர் கூறுவது தான் அரசாங்கம் மேசையில் வைத்திருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் மெய்யான நோக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொண்டால்,நாட்டில் இனவாதம் இல்லை என்று அரசுத் தலைவர் திரும்பத்திரும்ப சொல்வதை எப்படி விளங்கிக் கொள்வது? இன அடிப்படையிலான தேசியவாதத்தை ஒரு தீமையாக அரசாங்கம் கருதுமாக இருந்தால்,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை என்று பொருள்.தமிழ்மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பது.அதாவது இலங்கைத்தீவின் பல்லினச் சூழலை ஏற்றுக்கொள்ள மறுப்பது.அதுதானே இனவாதம்?














