இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்று (18) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்ட காற்றுத் தரக் குறியீட்டின் (AQI) அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 186 என்ற குறியீடு பதிவாகியுள்ளது.
இதற்கமைய, கிளிநொச்சியில் 170, சிலாபத்தில் 164, அனுராதபுரத்தில் 165 மற்றும் பத்தரமுல்லையில் 166 என்ற குறியீடுகள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, திருகோணமலையில் 156, அக்கரைப்பற்றில் 154 என்ற காற்றுத் தரக் குறியீடுகள் பதிவாகியுள்ளன.
குறித்த பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், எல்ல பகுதியில் 101 என்ற குறியீடு பதிவாகியுள்ளதுடன், இது சற்றே ஆரோக்கியமற்ற நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் 96 என்ற குறியீடு பதிவாகியுள்ளதுடன், அங்கு காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுகிறது.
காற்றின் தரமானது மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதிக்கக்கூடிய ஆறு முக்கிய மாசுபடுத்திகளின் செறிவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
இதன்படி, காற்றுத் தரக் குறியீட்டில் 0 முதல் 50 வரையிலான அளவுகள் நல்ல நிலையாகவும், 51 முதல் 100 வரையிலான அளவுகள் மிதமான நிலையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.
101 முதல் 150 வரையிலான அளவுகள் சற்றே ஆரோக்கியமற்ற நிலையாகவும், 151 முதல் 200 வரையிலான அளவுகள் ஆரோக்கியமற்ற நிலையாகவும் கருதப்படுகின்றன.
அத்துடன், 201 முதல் 300 வரையிலான அளவுகள் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையாகவும், 301 முதல் 500 வரையிலான அளவுகள் அபாயகரமான நிலையாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.
எனவே, காற்று மாசு அதிகமாகப் பதிவாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடியவர்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.












