ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.
இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.
அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார்.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலையிலும், ஏப்ரல் 05 ஆம் திகதி காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதனால், குறித்த வீதிகள் அவ்வப்போது பொதுப் பயன்பாட்டுக்காக அவ்வப்போது மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
கூடுதலாக, இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் நபர்கள் தற்காலிக வீதி மூடல்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அப்பேகாம வளாகத்தின் வீதிகளும் அவ்வப்போது மூடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.















