தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை (Yoon Suk Yeol) அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (04) பதவி நீக்கம் செய்தது.
கடந்த ஆண்டு நாட்டின் மிக மோசமான அரசியல் நெருக்கடியைத் தூண்டிய குறுகிய கால இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக நாடாளுமன்றத்தின் பதவி நீக்கத் தீர்மானத்தை அந்த நீதிமன்றம் உறுதி செய்தது.
யூன் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன், நாட்டின் அரசியலமைப்பின்படி 60 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரை பிரதமர் ஹான் டக்-சூ தற்காலிக ஜனாதிபதியாக தொடர்ந்து பணியாற்றுவார்.
அரசியலமைப்பின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியாக தனது கடமையை மீறியதாகவும், அவரது செயல்களின் விளைவு ஜனநாயகத்திற்கு கடுமையான சவாலாகவும் இருந்ததாக தற்காலிக தலைமை நீதிபதி மூன் ஹியுங்-பே கூறினார்.
எட்டு நீதிபதிகள் மத்தியில் இந்த தீர்ப்பு ஒருமனதாக வழங்கப்பட்டது என்று மூன் கூறினார்.
இதனிடையே யூனை பதவி நீக்கம் செய்யக் கோரி நடைபெற்ற பேரணியில் இரவு முழுவதும் முகாமிட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் மேற்கண்ட தீர்ப்வு வெளியானதும் “நாங்கள் வென்றோம்!” என்று கோஷமிட்டனர்.
தென்கொரியாவின் வளர்ச்சி குறைந்து வரும் நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய நிர்வாகத்தை சமாளிக்கும் முயற்சிகளை மறைத்த பல மாத அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
தனித்தனியாக 64 வயதான யூன், கிளர்ச்சி குற்றச்சாட்டில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கிறார்.
ஜனவரி 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய ஜனாதிபதியாக அவர் ஆனார், ஆனால் நீதிமன்றம் அவரது கைது பிடியாணையை இரத்து செய்த பின்னர் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார்.
“அரச விரோத” கூறுகளை வேரறுக்கத் தேவை என்று அவர் கூறி கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவச் சட்டத்தை யூன் அறிவித்ததாலும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை துஷ்பிரயோகம் செய்ததாகவும், அது நாட்டை அழிப்பதாகக் கூறியதாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தை மூட பாதுகாப்புப் படையினரின் முயற்சிகளை சட்டமியற்றுபவர்கள் மீறி அதை நிராகரிக்க வாக்களித்ததை அடுத்து, ஆறு மணி நேரத்திற்குப் பிறகு யூன் ஆணையை நீக்கினார்.
அவசரகால இராணுவ ஆட்சியை முழுமையாக அமல்படுத்த தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறி, அதன் விளைவைக் குறைத்து மதிப்பிட முயன்றதாகவும் யூன் கூறியுள்ளார்.
பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன, யூனின் இராணுவச் சட்டப் பிரகடனத்தால் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இப்போது நீதிமன்றத் தீர்ப்பால் தணிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.