மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளதுடன், ‘4,589 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 221 பேர் காணாமற் போயுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார் நிறுவனங்கள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும் வீதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.