ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவில் இணைக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, மத்துகம, பாணந்துறை, பயாகல, பேருவளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி அவர் மொத்தமாக ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி ஆகியவை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேக நபர் இன்று (10) களுத்துறை நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவருக்கெதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















