ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் திங்களன்று (29) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி:20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேபாளம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை பதிவு செய்தது.
இந்தத் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் நாடான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை நேபாளம் பதிவு செய்ததுடன், தொடரையும் தன்வசப்படுத்தியது.
ஆசிஃப் ஷேக் மற்றும் சந்தீப் ஜோரா ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
சனிக்கிழமை இரண்டு முறை உலக சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நேபாளம் பெற்ற முதல் வெற்றியைத் தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்தது.
அங்கு அவர்கள் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
நேற்றைய போட்டியில் நேபாள அணியின் வீரர் ஷேக் 47 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதே நேரத்தில் ஜோரா 39 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்தார்.
இதில் ஐந்து சிக்சர்கள் அடங்கும்.
ஒரு கட்டத்தில் நேபாளம் 43-3 என்ற நிலையில் தடுமாறிய பின்னர் இந்த ஜோடி 11 ஓவர்களில் முக்கியமான 100 ஓட்ட கூட்டணியை உருவாக்கியது.
நேபாள அணி வீரர் மொஹமட் ஆதில் ஆலம் ஒரு சிறந்த பந்துவீச்சு செயல்திறனை பதிவு செய்தார்.
தனது ஒன்பதாவது டி20 போட்டியில் 4-24 என்ற சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேற்கிந்தியத்தீவுகளின் 83 ஓட்டங்கள் என்பது, டி20 போட்டிகளில் ஒரு இணை ஐசிசி உறுப்பு அணிக்கு எதிராக முழு உறுப்பினர் நாடு எடுத்த மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
இது 2014 டி20 உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த முந்தைய குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையான 88ஐ விடக் குறைவு.
சேஸிங்கில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கங்களை எட்டினர்.
ஜேசன் ஹோல்டர் அதிகபடியாக 21 ஓட்டங்களை எடுத்தார்.
கடந்த ஜூலை மாதம் கிங்ஸ்டனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களின் டெஸ்ட் அணி 27 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இது ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக அமைந்தது.
இந்த நிலையில், நேபாளத்துக்கு மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி இன்று (30) நடைபெற உள்ளது.

















