போலி தொலைபேசி இலக்கங்களை கொண்டு வெளிநாட்டு மோசடியாளர்கள் பிரித்தானிய மக்களிடம் மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்துறை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட கடும் நடவடிக்கையின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வங்கிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் வெளிநாட்டு அழைப்பு மையங்களைத் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு வருடத்திற்குள் “இவ்வாறான மோசடி செயப்பாடுகளை ஒழிக்க தொலைபேசி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
பிரித்தானியாவின் முன்னணி தொலைபேசி நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மோசடியாளர்களை கைது செய்ய புதிய கண்காணிப்பு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளருடன் அழைப்பை இணைக்கும் வழங்குநரை அடையாளம் காணமுடியும் எனவும், அவர்கள் யாரிடமிருந்து அழைப்பைப் பெற்றார்கள் என்பதைக் அடையாளம் காணும் வரையில் செயல்முறைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி பலருக்கு அன்றாட விரக்தியாக இருக்கின்றன.
வெளிநாட்டில் உள்ள மோசடியாளர்கள் பெரும்பாலும் வங்கிகள் மற்றும் அரசுத் துறைகள் போன்ற நம்பகமான அமைப்புகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுகினர்.
இந்நிலையில், பிரித்தானியாவின் மிகப்பெரிய தொலைபேசி நிறுவனங்கள், வெளிநாட்டு அழைப்பு மையங்கள் இங்கிலாந்து எண்களை ஏமாற்றும் திறனை அகற்றுவதற்காக அடுத்த ஆண்டுக்குள் தங்கள் இணைப்புகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன.
96 சதவீத கையடக்க தொலைபேசி பயனர்கள் தங்கள் திரையில் காட்டப்படும் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒரு அழைப்பிற்கு பதிலளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறார்கள் என்றும், அது தெரியாத சர்வதேச எண்ணாக இருந்தால் முக்கால்வாசி பேர் அழைப்பை எடுக்க வாய்ப்பில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் செயல்படும் மோசடி செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் செயல்பாடுகளை அகற்றுவதற்கான உளவுத் தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மேம்பட்ட அழைப்புத் தடமறிதல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கண்டறிந்து தடுக்க, மோசடி செய்பவர்கள் பயனர்களின் தொலைபேசிகளை அடைவதற்கு முன்பே அவர்களைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















