யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர்.
கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் வேன் ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேன், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பனவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நீண்டகாலமாக இரண்டு வன்முறைக் கும்பல்களிடையே காணப்பட்ட முன்பகையே இதற்கு காரணமாகும் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் 20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.













