டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா பிரதேசத்திற்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே இந்த மாதம் 25 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 95,394 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக சுற்றுலாத் துறை காணப்படுகிறது
எனினும் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக, இலங்கையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் சேதமடைந்தன.
சுற்றுலாப்பயணிகளை பெரும்பாலும் கவர்ந்த ரயில்பாதைகளும் சேதமடைந்தன.
மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திற்கு செல்லும் ரயில்மார்க்கங்கள் சேதமடைந்தமையினால் சுற்றுலா பயணிகள் குறித்த பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் இந்த மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு 3 44,309 ஆக காணப்பட்ட நிலையில் பேரிடர் சூழ்நிலை காரணமாக நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது
எனினும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் 195,394 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது
இவர்களில் 45,022 இந்திய சுற்றுலாப் பயணிகளும் 20,150 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 15,768 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் பேரிடரில் கடுமையாக சேதமடைந்த நுவரெலியா நகரம் படிப்படியாக மீண்டு வருகிறது,
மேலும் நுவரெலியா நகரம் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது
பேரழிவு காரணமாக மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்த போதிலும், அண்மையில் அம்பேவெல பகுதியில் இருந்து பதுளை வரையிலான ரயில் பாதை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.














