போரினால் பாதிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கியேவ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான ( Sloviansk ) ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சமாதான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு முன், டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் பேசிய நிலையில் அவர் இந்த அழைப்பை “சிறந்த பயனுள்ள” உரையாடல் என்று விவரித்தார்.
நேற்றையதினம் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ விடுதியில் டொனால்ட் டிரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து முக்கியமான சந்திப்பு நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு சுமூகமான முடிவை எட்ட நெருங்கிவிட்டதாக டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாலும், நிச்சயமான ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் தான் தெரியவரும்.
தற்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனியப் பகுதிகளை யார் தக்கவைத்துக்கொள்வது என்பதில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் முரண்பாடுகள் நீடிக்கின்றன.
குறிப்பாக, போர் முன்னணியில் ஒரு இராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க உக்ரைன் விரும்பினாலும், கைப்பற்றிய நிலங்களை விட்டுக்கொடுக்க ரஷ்யா மறுத்து வருகிறது.
தற்போது டான்பாஸ் உட்பட உக்ரைனின் கணிசமான பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதே இந்த அமைதி பேச்சுவார்த்தையில் உள்ள பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த விவாதங்கள் சரியான திசையில் நகர்வதாக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
















