உப ஜனாதிபதி இடைக்கால ஜனாதிபதியாக நியமனம்
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நேற்றையதினம் அமெரிக்க இராணுவ படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலா மீது நேற்றையதினம் அமெரிக்கா திடீர் தாக்குதலை மேற்கொண்டதுடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.
இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் ஆற்றினார்.
இதன்போது , “வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே எனவும் அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” எனவும் தெரிவித்தார்.
உலக நாடுகள் கண்டனம்
ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் கிர் ஸ்டார்மர் வெனிசுலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டமைக்கு கவலை இல்ல எனவும் அமெரிக்காவுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்க சிறப்புப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலின் மூலம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்த சம்பவத்திற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள விடயங்கள் கவலைக்குரியவை என்றும், அந்த சூழ்நிலையை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான தமது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்திய வௌியுறவுத் துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இதேவேளை, வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, 150 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் மற்றும் உயரடுக்கு தரைப்படைகள் வெனிசுலாவில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அரசாங்க அதிகாரி, இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை உலகெங்கிலும் உள்ள நாடுகள் கண்டித்துள்ளன, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் கொலம்பியா ஆகியவை மதுரோவை உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த நடவடிக்கை ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது என்றும் சர்வதேச சட்டத்தை மீறியிருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாக பல நாட்களாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நேற்று (ஜன. 3) காலை வெனிசுலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவின் அடுத்தகட்ட நகர்வு
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை (5) அவசர அமர்வை நடத்தவுள்ளது.
குறித்த அமர்விற்கு கொலம்பியா கோரிக்கை விடுத்ததையடுத்து ,சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















