2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சுக்கு முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், ஆறாம் வகுப்புக்கான MODULE சிஷ்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பாடப்புத்தகச் சுமையைக் குறைத்து, மாணவர்களுக்கு இலகுவான முறையில் கல்வியை வழங்கும் நோக்கில் இந்த புதிய தொகுதி முறையை விரைவுபடுத்துமாறு இதன்போது பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்றில் கையெழுத்திட்ட பெற்றோர்கள், அதனை கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பெற்றோர்களில் ஒரு குழுவினர் அமைச்சின் அதிகாரிகளுடன் நிலவரம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போதைய போட்டித்தன்மை வாய்ந்த கல்விச் சூழலில் தமது பிள்ளைகளுக்கு இந்த புதிய மாற்றங்கள் மிகவும் அவசியம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.













