கொலம்பிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 15 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் வடகிழக்கு கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பீச்கிராஃப்ட் 1900 என்ற இந்த விமானம், அரசுக்கு சொந்தமான சடேனா விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
மேலும் அது வெனிசுலாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில் உள்ள குகுடாவிலிருந்து ஒகானாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது புதன்கிழமை (28) விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, அந்த விமானம் புதன்கிழமை காலை குகுடாவில் உள்ள கமிலோ டாசா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, நண்பகலில் ஒகானாவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த சிறிது நேரத்திற்கு முன்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது.
உள்ளூர் அதிகாரிகள் பின்னர் விமானத்தின் சிதைந்த பாங்களை பிளேயா டி பெலனில் உள்ள குராசிகாவின் தொலைதூர, மலைப்பாங்கான பகுதியில் கண்டுபிடித்தனர்.
விமானத்தில் பயணித்த 13 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட 15 பேரும் விபத்தில் இறந்ததை உறுதிப்படுத்தினர்.
விபத்து நடந்த பகுதி கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகளுக்கு பெயர் பெற்றது, இதனால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் சவாலானவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எவ்வாறெனினும், விமானப்படை மற்றும் சிவில் விமானப் புலனாய்வாளர்கள் உட்பட கொலம்பிய அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு குழுக்களை அனுப்பி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் விபத்தில் உயிரிழந்ததாகவும், அதிகாரப்பூர்வ விசாரணை நடந்து வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

















