பழனி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி தினமும் 6 கால பூஜையின்போது 6 வகையான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ராஜ அலங்காரத்தைக் காணவே பெருவாரியான பக்தர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில், பழநி முருகனுக்கு அணிவிக்கப்படும் ராஜ அலங்கார உடையைப்போல், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள முருகன் கோயிலில் சுவாமி சிலைக்கு அணிவிப்பதற்காக 2 ராஜ அலங்கார உடைகள் வடிவமைக்கப்பட்டு, பழனியில் இருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
பெப்ரவரி 1-ம் ஆம் திகதி தைப்பூசத்தின்போது இந்த ராஜ அலங்கார உடைகள் முருகனுக்கு அணிவிக்கப்பட உள்ளன
இதுகுறித்து சுவாமி சிலைகளுக்கு ஆடைகளை வடிவமைத்து தரும் பழநியைச் சேர்ந்த தையல் கலைஞர் எஸ்.முனுசாமி கூறியதாவது: ஐந்தாவது தலைமுறையாக சுவாமி சிலைகளுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறேன்.
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கும் ஆர்டரின்பேரில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்கிறேன்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத்தன்று முருகனுக்கு அணிவிப்பதற்காக 2 ராஜ அலங்கார உடைகளை வடிவமைத்து, விமானத்தில் அனுப்பி வைத்துள்ளேன். இதேபோல, மலேசியா முருகன் கோயிலில் ஏற்றப்பட்டுள்ள
தைப்பூசக் கொடியும் நான் தயாரித்து அனுப்பியதுதான்.
ராஜ அலங்கார உடையில் சட்டை, கால் சட்டை மற்றும் கிரீடம் போன்ற தலைப்பாகை இடம் பெறும். பட்டுத்துணி, முத்துக்களால் ராஜ அலங்கார உடை வடிவமைக்கப்படுகிறது.
ஒரு ஆடையை வடிவமைக்க குறைந்தது 10 நாட்களாகும். ராஜ அலங்கார உடை ஒன்று ரூ.6,500. சுவாமி ஆடைகள் மட்டுமின்றி சுவாமி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் குடை, தோரணங்கள், தேரோட்டத்தின்போது தேரில் பயன்படுத்தப்படும் துணிகள், தொம்பை, ஆறுமுக காவடியும் வடிவமைத்து கொடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

















