ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். தனது இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், சுறுசுறுப்பான, வலுவான, பன்முக மூலோபாய கூட்டாண்மையையும் இந்தியாவும் இஸ்ரேலும் பகிர்ந்து கொள்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதுமை, விவசாயம், நீர் மேலாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் பிரதமர் நெதன்யாகுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள இருக்கிறேன். பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திக்க உள்ளேன். மேலும், இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் நான் பெறுவேன். நமது இரு நாடுகளையும் இணைக்கும் வலுவான நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக உறவுகளுக்கு மரியாதை அளிப்பதாக இது இருக்கும்.
இந்தியா – இஸ்ரேல் இடையே சிறப்பான நட்பை நீண்ட காலமாக வளர்த்து வரும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எனது அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் பலப்படுத்தும், மூலோபாய கூட்டாண்மைக்கான புதிய இலக்குகளை அமைக்கும், நெகிழ்ச்சியான, புதுமையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட பார்வையை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்த உள்ளதை முன்னிட்டு இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட், இந்திய தேசிய கொடியில் உள்ள மூவர்ணங்களால் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ள குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் சபாநாயகர் அமிர் ஒஹானா, ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நெசட் இன்று இரவு இந்திய கொடியின் வண்ணங்களால் ஒளிரச் செய்யப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதவிக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, ‘‘இது ஒரு கௌரவப்படுத்தும் செயல். இன்று மாலை நெசட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.














