தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்படும் விசேட தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இந்தியப் பயணத் திட்டம் குறித்த தெளிவுபடுத்தல் நிகழ்வு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உப தலைவர் பாரத் அருள்சாமி, கட்சியின் செயல் திட்டங்களையும் கொள்கைகளையும் அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்வதற்கு இந்தியாவின் அறிவையும் அனுபவத்தையும் இந்த உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வாய்ப்பானது மிக இலகுவாகக் கிடைத்துவிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் தலைமைத்துவம் பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே இவ்வாறானதொரு காத்திரமான பயிற்சியை இவர்களுக்காக பெற்றுக்கொடுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இது வெறும் பயணமாக அமையாது, உறுப்பினர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதோடு தொழில்முனைவு சார்ந்த அறிவையும் மேம்படுத்தும் ஒரு களமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசாங்கம் மட்டுமன்றி ஏனைய சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து இவ்வாறான பல ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கட்சியின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தற்பொழுது ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய பயணம் குறித்தும் காரசாரமாக கருத்துக்களை முன் வைத்தார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














