தமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார். நல்ல கண்ணு அப்படித்தான் வாழ்ந்தார். அவர் சொத்துச் சேர்க்கவில்லை.புகழுக்கோ பதவிக்கோ போகங்களுக்கோ ஆசைப்படவில்லை.எளிமையாக வாழ்ந்தார். அவருடைய எளிமையை,சந்நியாசத்தை தமிழ்நாட்டில் யாரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை.
அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார்.
இந்தஇடத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வாழ்நாள் போராளி என்று அழைக்கப்பட்ட ஒருவர்,தன் வாழ்நாளில் என்றைக்குமே தமிழ்மக்களால் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஏன் ?
மேற்கு வங்கத்தில்,திரிபுராவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மிக எளிமையான,ஒரு சன்னியாசி போல வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வாசிக்கலாம். அவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்?தனக்கென்று சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை,அவருடைய மனைவி முச்சக்கர வண்டியில்தான் அலுவலகத்துக்கு போவார்…என்றெல்லாம் போற்றப்படுகிறது.
இந்தியாவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர்தான் நல்லகண்ணு.அவர் நூற்றியொரு வயதுவரை வாழ்ந்தார்.ஆனால் போட்டியிட்ட தேர்தல்களில் அவர் வெற்றி பெறவேயில்லை.தமிழ்நாட்டு மக்கள் அவரை தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் ?
வாழ்நாள் போராளிகளாக வாழ்ந்த,வாழ்கின்ற நல்லகண்ணுக்கள் ஏன் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை? கெட்ட கண்ணுகள்தானே அதிகமாகத் தெரிகிறார்கள்? தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் எத்தனை பேர் நல்லகண்ணுகள்? எத்தனை பேர் கெட்ட கண்ணுகள் ? தமிழ் வாக்காளர்கள் ஏன் பெரிய அளவுக்கு நல்லகண்ணுகளை தமது தலைவர்களாகத் தெரிந்தெடுப்பதில்லை?
திரை நட்சத்திரங்களுக்காகக் தீக்குளிக்கும் மக்கள்.திரை நட்சத்திரங்களுக்காக தலையை மழிக்கும் பெண்கள்.திரை நட்சத்திரங்களுக்காக மீசையை மளிக்கின்ற ஆண்கள்.நாக்கை,விரலை வெட்டுகின்ற,விரதம் இருக்கின்ற,படித்த,படிக்காத ரசிகர்களைக் கொண்ட ஒரு சமூகம், நல்லகண்ணுகளை ஏன் தேர்ந்தெடுக்காமல் விடுகிறது?
ரணா படத்தில் வரும் சீக்கிய போலீஸ் அதிகாரி கூறுவது போல தமிழ் மக்களில் அதிகமானவர்கள் “சென்ரிமென்ரல் இடியட்களா”?நல்லகண்ணுகளை தேர்ந்தெடுக்க அவர்களால் முடியாதா?
அல்லது நல்லகண்ணுகளால் வெற்றிகரமாக தேர்தல் அரசியலை முன்னெடுக்க முடியவில்லையா? ஏன் முடியவில்லை?
ஈழத் தமிழ் அரசியலில் நான் திரும்பத் திரும்பக் கூறும் ஓர் உதாரணம் உண்டு. நல்ல தங்கத்தை வைத்து ஆபரணங்களை,நகையைச் செய்ய முடியாது. அதை வேண்டுமென்றால் அயர்ன் சேவில் பாதுகாக்கலாம்.தங்கத்தை அதன் பிரயோக நிலைக்கு கொண்டு வருவது என்றால் அதாவது ஆபரணங்கள் செய்வதென்றால் அங்கே ஏதோ ஒரு விகிதம் செப்பைக் கலக்க வேண்டும்.அதாவது தூய தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்யமுடியாது.அதன் தூய்மையைக் கெடுக்கும் செப்பைக் கலப்பதன் மூலம்தான் அதனை மக்கள் மயப்படுத்தலாம்.
இது தங்கத்துக்கு மட்டுமல்ல,நல்லகண்ணுகளுக்கும் பொருந்தும்.நூறு விகிதம் நல்லகண்ணுகளாக இருந்தால் தேர்தல் அரசியலில் இறங்க முடியாது. இறங்கினாலும் வெல்ல முடியாது.தேர்தல் அரசியலில் வெல்வதற்கு சாதி வேண்டும்; சமயம் வேண்டும்; ஊர் வாதம் வேண்டும்; பிரதேச வாதம் வேண்டும்; அல்லது இதுபோல ஏதோ ஒரு குருட்டு சென்ரிமென்ரல் வாதம் வேண்டும். ஆனால் நல்லகண்ணுகள் அப்படிப்பட்ட தீய தேர்தல் உபாயங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள்.மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்;மக்கள் மத்தியில் கருத்தாக்கம் செய்ய வேண்டும்;அதன்மூலம் “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று அவர்கள் நம்புவார்கள்; உழைப்பார்கள்.
ஆனால் துயரம் என்னவென்றால்,ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல,உயர்ந்த ஜனநாயகங்கள் என்று போற்றப்படும் மேற்கு நாடுகளிலும்கூட கருத்து மக்களைப் பற்றிக்கொள்வதை விடவும்,அறிவு மக்களைப் பற்றிக் கொள்வதை விடவும், உணர்ச்சிகரமான நிறம்,இனம்,மதம், மொழி… போன்ற குருட்டு விசுவாசங்கள்தான் எளிதாகப் பற்றிக் கொள்கின்றன.
ஜனநாயகப் பரப்பில் அறிஞர்களும் நல்லகண்ணுகளும் அரிதாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள்.அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.அவர்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது.அவர்களுக்கு வேஷம் போடத் தெரியாது.அதாவது அவர்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.இங்கே பிரச்சினை அவர்களுடைய நேர்மைதான்; அவர்களுடைய ஒழுக்கம்தான்;அவர்களுடைய பற்றின்மைதான்.
நடிகர்கள் திரையிலும் நடிக்கிறார்கள்; அரசியலிலும் நடிக்கிறார்கள். ஆனால் அறிஞர்களோ,நல்லக்கண்ணுகளோ மக்களை ஏமாற்ற விரும்புவதில்லை. அதனால் தேர்தல் அரசியலில் அவர்கள் பெரும்பாலும் தோற்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, அதைவிட முக்கியமாக தேர்தல் அரசியல் ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது. அதற்குரிய தொழில் திறன்களை கொண்டிருப்பவர்கள்தான் அதில் வெல்லலாம்.எல்லா நல்லகண்ணுகளுக்கும் அந்தத் தொழில் திறன் இருப்பதில்லை.
இது தமிழகத்துக்கு மட்டுமல்ல,தமிழகத்திலிருந்து சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அதுதான். அரசியலை அறிவியல் ஒழுக்கமாகப் பயில்பவர்கள்,மக்களைக் கருத்தாக்கம் செய்ய வேண்டும்,விழிப்பூட்ட வேண்டும் என்று உழைப்பவர்கள்,தேர்தல் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.தேர்தல் அரசியலுக்குள் வந்தால் தங்களுடைய தூய தங்கத் தன்மை கெட்டுவிடும் என்றும் பயப்படுகிறார்கள். சொம்பு கலந்த ஒரு வாழ்க்கையை அவர்கள் விரும்பவில்லை.செம்பு கலந்த அரசியலுக்கும் அவர்கள் தயாரில்லை.
இந்தத் தூய்மைவாதம்-அப்படித்தான் அதை கூறவேண்டும்- காரணமாகத்தான் ஒப்பீட்டளவில் நல்ல கண்ணுகளாக இருப்பவர்கள் தேர்தல்களில் வெல்ல முடியாமல் இருக்கிறார்கள்.கெட்ட கண்ணுக்கள்தான் பெரும்பான்மை தமிழ் மக்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள்.கெட்ட கண்ணுகள்தான் தமிழ் மக்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிகிறார்கள்.
அல்லது ஓரளவுக்கு தங்களை தேர்தல் அரசியலில் சுதாகரித்துக் கொள்ளத் தயாராக காணப்படும் நல்லகண்ணுகள் மக்கள் பிரதிநிதிகளாக வருகிறார்கள்.
இலங்கைத் தீவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த மக்கள் எழுச்சிகளை பின்னின்ற இயக்கியது முன்னிலை சோசலிசக் கட்சியும் குறிப்பிட்ட சில மக்கள் அமைப்புகளும் ஆகும். ஆனால் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய குடைச்சின்னத்தின் கீழ் போட்டியிடும் கூட்டமைப்பானது தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.அது அவமானகரமான ஒரு தோல்வி என்பதை விடவும் ஆபத்தான தோல்வி. அந்தக் கூட்டமைப்பு இன்றுவரை தேர்தல் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை.ஆனால் அந்த மக்கள் எழுச்சிகளின் கனிகளை தேர்தல் மேடைகளில் பொருத்தமாக மொழிபெயர்க்கத் தெரிந்த அனுர ஜனாதிபதியாக வந்து விட்டார்;தேசிய மக்கள் சக்தி ஆளுங்கட்சியாக வந்துவிட்டது.
அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போர்க்களத்தில் நின்று அவயவங்களை இழந்த முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் கேட்டார்கள். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்த முன்னால் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார், குறைந்தது 15,000 வீடுகளுக்கு நாங்கள் ஏறியிறங்கி இருப்போம் என்று. ஆனால் அந்த வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளோ கிட்டத்தட்ட 2000தான். தங்களுக்காகப் போராடப் போய்,தங்களுக்காக உறுப்புகளை இழந்தவர்களுக்கு தமிழ்மக்கள் கொடுத்த வாக்குகள் அவை.
நல்லகண்ணுகள் தூய நல்லகண்ணுகளாக இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது 100% தூய்மையான ஒரு நடவடிக்கையும் அல்ல. அது ஒரு வகைச் சூழ்ச்சி; ஒரு வகைச் சதி; ஒரு வகை தந்திரம்; ஒரு வகை வியாபாரம்;ஒரு வகை தொழில் தேர்ச்சி. நல்லகண்ணுகள் அதைக் கற்றுத்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான நல்லகண்ணுகள் அதைக் கற்றுக்கொள்ளத் தயாரில்லை.தங்களைத் தூய தங்கங்களாக வைத்துக் கொண்டிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
நல்லகண்ணுவின் மறைவு தமிழகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய அதே காலப்பகுதியில் நடிகர் விஜேயினுடைய மனைவி விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற செய்தி வெளியே வந்தது. அந்தச் செய்தி நல்ல கண்ணுவின் மறைவுச் செய்தியை விடவும் அதிகம் “வைரல்” ஆகியது.தமிழ்ப் பொதுப் புத்திக்கு விழிப்பூட்டாத நடிகர்களைப் பற்றிய செய்திகள் எளிதாக வைரல் ஆகின்றன.ஆனால் தமிழ்ப் பொதுப்புத்திக்கு விழிப்பூட்ட வேண்டும், தமிழ்ப் பொதுப்புத்தியை கருத்தாக்கம் செய்ய வேண்டும் என்று கனவுகாணும் நல்லகண்ணுகளை தமிழ்ப்பொதுப் புத்தி எப்பொழுது போற்றும்; கொண்டாடும்?













